Connect with us

Cinemapettai

தமிழ் சினிமாவுடன் இணைந்துள்ள கலைகள்!

Entertainment | பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவுடன் இணைந்துள்ள கலைகள்!

எந்த ஒரு படைப்புக்கும், அது எந்த ஒரு ஊடகத்தைச் சார்ந்ததாக இருந்தாலும், மிக முக்கியமான தேவைஅமைதி.”நீங்கள் சலனமற்று அமைதியாக அமர்ந்திருக்க முடியுமென்றால் இயற்கை தானாகவே உங்களை நெருங்கும். பறவைகள் உங்கள் மீது வந்தமரும்”, என்றார் ஹென்றி டேவிட் தோரோ.

இயற்கையைநெருங்குவதென்பது,வாழ்வினை நெருங்குவது; நம்மை நாமே நெருங்குவது; நமக்குள்ளாக நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டத்தை நெருங்குவது.

உங்கள் எதிரே தென்படும் நாய்க்குட்டியிடம் முயற்சித்துப் பாருங்கள். அது வளர்ப்பு நாய் என்றாலும் தெரு நாயென்றாலும் உங்கள் உடல் மொழி பதற்றமேற்படுத்தும் வகையில் இருக்குமானால் அதனை உங்களால் நெருங்கவே முடியாது, விலகி ஓடவே முயற்சிக்கும். இதுவே வாழ்க்கைக்கும் பொருந்துகிறது.

கலை, வாழ்வை நெருங்கிப் பரிசீலித்து அந்தப் பரிசீலனையை அனுபவமாக்கித் தருகிறது. எனவே ஒரு கலைஞன் எவ்வளவு தூரம் அமைதியைத் தன் கலையினுள் அனுமதிக்கிறான் என்பதைப் பொறுத்து அவனது கலையின் தரம் அமைகிறது.

Pasanga-1

இலக்கியத்தில் வார்த்தைகளுக்கிடையேயான இடைவெளிகளில் இந்த அமைதி சாத்தியமாகிறது. இசையில் மெளனம் எப்படி மீட்டப்படுகிறது என்பதன் மூலமும், நடனத்தில் எந்த இசைத் துணுக்குக்கு உடலசைவுக்காக எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதன் மூலமும், ஓவியத்தில் எந்த வண்ணம் என்னவாக உருவாக்கப்படுகிறது என்பதன் மூலமும், அமைதி தன் இருப்பினைத் தக்கவைத்துக் கொள்கிறது.

சினிமாவும் எந்த வழியிலும் இதற்கு விதிவிலக்கல்ல. சினிமா ஒளியையும் ஒலியையும் நம்பி இயங்குமொரு ஊடகம். இதில் கேமரா கோணங்களும்,பின்னணி இசையும், படத்தொகுப்பு முறையும் அமைதியைத் தருவிக்க உதவும் கருவிகளாகின்றன.

உலக அளவில் முக்கியமான கலைப்படைப்பாக மதிக்கப்படும் எந்த ஒரு சினிமாவை வேண்டுமானாலும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கேமரா கோணங்கள் ஆனவரை பதற்றத்தைக் குறைப்பதாக அமைந்திருக்கும்;பின்னணி இசையில் அமைதி இழையோடும்; படத்தொகுப்பு என்ற ஒன்று இருப்பதே மேலோட்டமான பார்வைக்குப் புலப்படாது.

ஆனால் தமிழ் சினிமாவில் இவை சாத்தியமாவதில்லை. ஒரு இரவினை,சில்வண்டு ஏற்படுத்தும் சத்தங்களையும் சிறு சிறு சலசலப்புகளையும் மட்டும் பின்னணியாகக் கொண்டு ஒரு இயக்குனர் இங்கே உருவாக்கிவிட முடியாது.முதலில் தயாரிப்பாளர் ஊமைப்படமாக இருக்கிறது என்று புலம்பத் துவங்குவார். இசையமைப்பாளருக்குக் கொடுத்த சம்பளம் நஷ்டக்கணக்காக குறிக்கப்படும். முக்கியமாகத் திரையரங்கில் பார்வையாளன் சத்தம் செய்து அரங்கில் தோன்றும் அமைதியைக் கலைக்க முயல்வான்.

பின்னணி இசை இப்படியென்றால், பெரும்பாலான படங்களில் கேமரா பதற்றம் கொண்டு அலைந்து கொண்டேயிருப்பதையும் காணமுடிகிறது.படத்தொகுப்பெல்லாம் படம் பிடிக்கும் நேரத்தில் மனதில் கொள்ள வேண்டியதேயில்லை; இங்கொரு கேமரா அங்கொரு கேமரா என்று நான்கைந்து கோணங்களில் கேமராக்களை வைத்துவிட்டால் போதுமானது; விஷ் விஷ் என்று சிறப்பு சத்தம் கொடுத்து அதன் மூலம் ஒரு செயற்கையான இணைப்புடன் காட்சிகளை சகட்டுமேனிக்குக் கோர்த்து விடுகிறார்கள். கண்ணுக்கு முன் எந்தக் காட்சி என்னவென்று புரிபடாத வேகத்தில் படம் நகருமென்றால் அது வேகமாக நகரும் படம் என்று பார்வையாளனால் புரிந்து கொள்ளப்படுகிறது.

இத்தனைக்கும் காரணம் அமைதியை, நிதானத்தை ஏற்க தமிழ் மனங்கள் பழக்கப்படவில்லை என்பதே.சினிமாவுக்கு வெளியிலும் தமிழ்ச் சமூகம் அத்தனை விஷயங்களிலும் இப்படியானதாகவே இருக்கிறது.

Vijay

நமது மேடைப் பேச்சாளர்கள் ஒலி அளவைக் கூட்டிக்கொடுக்க மைக் ஒன்றுவைக்கப்பட்டிருப்பதைக் கூட மறந்துவிடுபவர்கள்.ஆவேசமான குரலெடுத்து உச்சஸ்தாயியில் அலற முடிபவர்களுக்கே தமிழ் மக்கள் பெரும்பாலும் செவி சாய்க்கிறார்கள். (சாய்ப்பதுசெவியை மட்டுமே,சிந்தனையை அல்ல என்பது இந்த இடத்தில் கவனம் கொள்ள வேண்டியது). நம்பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடக்கும் பேச்சுப் போட்டிகளை உற்று நோக்கினால் இதன் வேர் துளிர் கொள்வது தென்படக்கூடும்.

ஒரு கோவில் விழா என்றால், மோசமான ஒலிபெருக்கியில் மிக மோசமாக பாடல்களை ஒலிக்கச் செய்வதன் மூலம் தெருவின் அமைதியைக் கலைப்பதிலிருந்து ஏற்பாடுகள் துவங்குகின்றன. நான்மயிலாடுதுறையிலிருந்த நாட்களில் எங்கள் வீட்டிலே கூட கவனித்திருக்கிறேன். பல நாட்கள் “முருகா நீயல்லால் தெய்வமில்லை”என்ற பாடல் அலறத் துவங்க திடுக்கிட்டு விழித்தெழ நேரிடும். “இவ்வளவு சத்தமாக அழைத்தால் முருகர் பயந்து ஓடிவிடமாட்டாரா?” என்ற கேள்வி பொதுவாக நாத்திகம் என்ற வகையில் புரிந்து கொள்ளப்படும்.

நம் டீ கடைகளில் இசை ரசிகர்கள் அதிகம். தெருவில் புழங்கும் அத்தனைபேரின் காதுகளுக்கும் கர்ண கொடூரமாகச் சென்று சேரும் வரை இசைச் சேவை செய்து இன்புறுகிறார்கள். மாநகரின் மக்களுக்கோ காலை துவங்கி மாலை வரை ஏதோ ஒரு FM சத்தம் செய்தபடி இருக்க வேண்டும். “சரி, இவ்வளவு பாடல்களைக் கேட்கிறீர்களே உங்களுக்குப் பிடித்ததொரு பாட்டு ஏன் பிடித்திருக்கிறது?”, என்று கேள்வி கேட்பீர்களானால் அனேகப் பேரிடம் சரியானதொரு பதில் இருக்காது. காரணம், கேட்கப்படுவது இசையோ பாடல் வரிகளோ அல்ல. அமைதிக்குப் பதிலீடாக ஒரு சத்தம் தேவைப்படுகிறது அவ்வளவே.

காட்சி அளவிலும் நாம் புழங்க நேரும் தெருக்கள் முதல், திறந்து கிடக்கும் சாக்கடைகள், மூத்திர சந்துகள், குப்பைக்கூளங்கள் என மோசமான வாழ்க்கை முறைக்கு முழுமையாகப் பழக்கப்பட்டுவிட்டோம். இதனால் சகிப்புத்தன்மை கூடுகிறது, அழகியல் உணர்வு குறைகிறது.

ஒழுங்கும் நுட்பமும் அழகியலுணர்வும் தென்படும் இடத்தில் மட்டுமே அமைதி சாத்தியமாகிறது. அமைதியை அனுமதிப்பதே நுண்ணுணர்வைக் கூட்டிக் கொள்வதற்கான வழி. நுண்ணுணர்வே கலையினை உள்வாங்க, வாழ்க்கையைப் பரிசீலிக்கக் கற்றுத் தருகிறது. தமிழ்ச் சமூகத்திலோ நுண்ணுணர்வு என்றால் என்ன என்று முதலில் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

நான் கவனித்தவரை இன்றைய தாய்மார்களில் பலர், ‘அட்றா அட்றா நாக்கு முக்க’ போன்ற பாடல்களைப் போட்டு தங்கள் குழந்தைகளுக்கு சோறூட்டுகிறார்கள். கதைகளைச் சொல்லி உணவு கொடுப்பதெல்லாம் வழக்கொழிந்து வருகிறது. கதைகளைச் சொல்ல முதலில் தாய்க்குக் கதை தெரிந்திருக்க வேண்டுமில்லையா?

இதனால் நிகழ்வது என்ன? குழந்தை எது என்னவென்று பிரித்தறிய வழியில்லாத சிறுவயதிலிருந்தே அமைதியைக் கலைத்தபடி வரும் பொருளற்ற சத்தத்தை உளவியல் ரீதியாகப் பழக்கம் கொள்ளத் துவங்குகிறது.

விளைவாக, எல்லாவற்றிலும் அமைதியைப் புறக்கணித்து நம்மை விட்டு, நம் வாழ்வை விட்டு, விலகி ஓடும் வாழ்வே நமக்கு சாத்தியமாகிறது.

இலக்கியம் போன்ற ஓரிரு துறைகளில் சாதனைகள் நிகழ்த்தப்படுகிறதென்றால் அது வழி தப்பிப் பிழைத்த ஒரு சில தனி மனிதர்களின் முயற்சி. அதையும் எத்தனை பேர் வாங்கிப் படிக்கிறார்கள் என்று கவனித்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

சினிமா இலக்கியத்தை விட தயாரிப்புச் செலவு மிக்க ஊடகமாக இருப்பதால் அது அப்படி இயங்க வழியின்றி,பார்வையாளனுடன் ஆனவரை சமரசம் செய்து கொள்ள முயல்கிறது. உண்மையில் தமிழ் சினிமாவில் தரக் குறைவு என்பது அமைதியை, அது உருவாக்கிக் கொடுக்கும் நுண்ணுணர்வை, வாழ்வு காட்டும் நிஜமான அழகியலை, தன் வாழ்வின் எந்த விஷயத்திலும் அனுமதிக்காத தமிழ்ச் சமூகத்தின் பிரதிபலிப்பே. இதற்கு நாம் வைத்திருக்கும் செல்லப் பெயர், கேளிக்கை என்பது.

இப்படிப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளாகத் தங்களை முன்நிறுத்திக் கொள்ள முடியுமென்ற நிலையிலேயே நம் சினிமா இயக்குனர்களும், நடிகர்களும் வெற்றியாளர்களாக அறியப்படுகிறார்கள். இதனையெல்லாம் மையமாகக் கொண்டே நம் சினிமாவின் தொழில்நுட்ப சமாச்சாரங்கள் -கலையின் அடிப்படைகள் கொஞ்சம் கூட தென்படாத வகையில் -வளர்த்தெடுக்கப்படுகின்றன.

இதற்கு மாற்று என்று ஒன்றைத் தேடினோமென்றால் நாம் சென்று சேரும் இடம் ஆச்சரியமானது.

ஒரு சமூகம் எந்த ஒரு உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றாலும் அதற்கு அந்த சமூகத்தில் புழங்கும் மக்கள் அந்த உணர்வின் அற்புதத்தை முதலில் அனுபவித்து உணர வேண்டும். அப்படி ஒரு அனுபவத்தைக் கலையே ஏற்படுத்தித் தரமுடியும். நம் கையிலிருக்கும் கலைவடிவங்களில் இன்றைய தேதியில் காட்சி ஊடகமே அனைவரையும் சென்றடையக்கூடியது. ஆக, தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை மாற்றமே கூட சினிமாவிலிருந்தே பிறக்க வேண்டியிருக்கிறது!

எனவே, தன் அத்தனை தடைகளையும் தாண்டி, பார்வையாளனின் உளவியலையும் புரிந்துகொண்டு ஒரு இயக்குனர் காட்சி ஊடகம் சார்ந்த அமைதியை, அழகியலை, சுவாரஸ்யமூட்டும் விதத்தில் தமிழ்த் திரையில் அறிமுகப்படுத்த வேண்டும்.

அப்படி எத்தனை இயக்குனர்கள் எவ்வளவு சீக்கிரம் தோன்றப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தும் பார்வையாளர்கள் எவ்வளவு சீக்கிரம் அவர்களுக்கான வரவேற்பை வழங்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்தும் தமிழ் சினிமாவும் தமிழ்ச் சமூகமும் மேம்படத் துவங்கும். அதுவரை அதனை நோக்கிய எதிர்பார்ப்புடன் நாம் இதுபோன்ற கட்டுரைகளை எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் மாற்றத்துக்கான காரணிகளை விவாதித்துக் கொண்டும் இருக்க வேண்டியதுதான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top