எஸ்.வி. சேகர்

S.V.Sekar-1

கிட்டுமணி, சிகாமணி போன்ற பெயர்களை கேட்டவுடன் நம் நினைவுக்கு முதலில் வரும் நகைச்சுவை நடிகர் திரு. எஸ். வி. சேகர் அவர்கள். இவரது புகழ் திரைபடங்கள் மட்டுமல்லாது சின்னத்திரை மற்றும் மேடை நாடகங்களிலும் விரவிக்கிடக்கிறது. இவரது தயாரிப்பில் இதுவரை சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்கள் அரங்கேறியுள்ளன, 5000த்திற்கு மேலாக மேடை நாடகங்களை அரங்கேற்றி உள்ளார். சிரிப்பு உங்கள் சாய்ஸ், வால் பையன், காதுல பூ, அமெரிக்காவில் அருக்காணி, போன்ற மறக்க முடியாத நகைச்சுவை நாடகங்கள் அதுமட்டுமல்லாமல், 1979ல் நினைத்தாலே இனிக்கும் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி இன்றுவரை சுமார் 90-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஸ்பரிசம், சுபமுகூர்த்தம், சிதம்பர ரகசியம், பூவே பூச்சுடவா, சகாதேவன் மகாதேவன், பிறந்தேன் வளர்ந்தேன், தங்கமணி ரங்கமணி, வேடிக்கை என் வாடிக்கை, வறுமையின் நிறம் சிவப்பு, திருமதி ஒரு வெகுமதி, ஜீன்ஸ், தங்கமணி ரங்கமணி, குடும்பம் ஒரு கதம்பம், மணந்தால் மகாதேவன், கந்தா கடம்பா கதிர்வேலா, வல்லவன் போன்றவை இவர் நடித்த புகழ் பெற்ற திரைப்படங்கள் ஆகும். மேலும், 2006ல் அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். நிகழ்ச்சி தயாரிப்பு, ஒலிப்பதிவு, நிழல்படம் எடுப்பது, இயக்குதல், தொகுத்தல், அரசியல், நடிகர் எனப் பலதுறைகளிலும் தடம் பதித்தவர் எஸ். வி. சேகர்.

கல்வி

எஸ். வி. சேகர் (சட்டநாதபுரம் வெங்கடராமன் சேகர்) தஞ்சாவூரில் தனது மூன்றாம் வகுப்பு வரை படித்தார், பிறகு திருவல்லிக்கேணியிலுள்ள இந்து மேல்நிலைப்பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். படிக்கும் பொழுதே, நாடகக்கலையில் ஈடுப்பாடு கொண்டவராக விளங்கிய அவர், தன் தந்தையுடன் இணைந்து சில நாடகப் பணிகளையும் செய்துவந்தார். விவேகானந்தா கல்லூரியில் பி.யூ.சி முடித்த பிறகு, இயந்திரவியல் துறையில் பட்டயப்படிப்பையும், காற்றுப் பதனாக்க கருவி மற்றும் குளிர்சாதனப் பெட்டி சரிசெய்தல் போன்றவற்றில் பட்டயப்படிப்பையும் முடித்தார்.

ஆரம்பகால பணிகள்

ஒரு ஒலிப்பதிவாளராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கியவர், பிறகு நாடகக் கலையில் கொண்டிருந்த ஆர்வத்தினால், தன்னுடைய தந்தை நடத்திவந்த கற்பகம் கலாமந்திர் என்ற நாடக நிறுவனத்தில் மேடை உதவியாளராகப் பணிபுரிய துவங்கினார். பின்னர், புகைப்டக் கலையிலும் கற்றுத் தேர்ந்தவராக விளங்கிய அவர், ஒலிப்பதிவிலும் புதுமைகள் செய்தார். அவர், இலங்கை வானொலிக்காக சுமார் 275 – க்கும் மேற்பட்ட ஒலித்சித்திரங்களைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சித் தயாரிப்பு, ஒலிப்பதிவு, நிழல்படம் எடுப்பது, இயக்குதல், தொகுத்தல் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவந்த அவர், நாரதர் என்ற தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

நாடகத்துறை பயணம்

1974 ல் நாடகப்ரியா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் துவங்கி இன்றுவரை ஆயிரக்கணக்கான நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். தமிழகம் மட்டுமல்லாமல், கனடா, அமெரிக்கா, துபாய், அபுதாபி, இலங்கை, சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, பாங்காக் என வெளிநாடுகளிலும் தன்னுடைய நாடகத்தினை மேடையேற்றியுள்ளார். நாடக சூப்பர்ஸ்டார், சிரிப்பலை சிற்பி, நகைச்சுவை தென்றல், நாடக வசூல் சக்ரவர்த்தி, காமெடி கிங், நகைச்சுவை இளவரசர், நகைச்சுவை நாயகன், சிரிப்பு செல்வன், நகைச்சுவை வேதநாயகன், நாடகரத்னா எனப் பல சிறப்பு பெயர்கள் வழங்கப்பட்டு நாடக சபாக்களாலும், நிறுவனங்களாலும் கௌரவிக்கப்பட்டார். மேலும், மைலாப்பூர் அகாடமி இவரை மூன்று வருடம் சிறந்த சிரிப்பு நடிகராக தேர்தெடுத்தது. 1990ல் விஸ்டம் என்ற பத்திரிக்கை, சிறந்த சிரிப்பு நடிகர் என்ற பட்டத்தை அளித்தது. இதைத் தவிர்த்து, கலைமாமணி, கலைவாணர் போன்ற சிறந்த விருதுகளையும் பெற்றுள்ளார்.

சினிமா பயணம்

S.V.Sekar-3

முதலில் கே. பாலச்சந்தர் மூலமாக வந்த நிழல்கள் நிஜமாகிறது வாய்ப்பையும் எஸ். பி. முத்துராமன் மூலமாக வந்த ஒரு கோயில் இரு தீபங்கள் வாய்ப்பையும் மறுத்த சேகர், 1979ல் நினைத்தாலே இனிக்கும் என்ற திரைப்படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமாகி பின் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த வறுமையின் நிறம் சிவப்பு என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடிகராகத் தன்னுடைய பெயரைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து, பல படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், சுமார் 90 திரைப்படங்களுக்கு மேல் நடித்து, ஒரு பன்முக நடிகராகவும் வலம்வந்தார்.

இயக்கிய நாடகங்கள்

வால்பையன், பெரியப்பா, காதுல பூ, அன்னம்மா பொன்னம்மா, அதிர்ஷ்டக்காரன், அல்வா, ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, சின்னமாப்ளே பெரியமாப்ளே, எப்பவும் நீ ராஜா, கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம், ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது, யாமிருக்க பயமேன், பெரிய தம்பி, இது ஆம்பளைங்க சமாச்சாரம், குழந்தை சாமி, மனைவிகள் ஜாக்கிரத்தை, சிரிப்பு உங்கள் சாய்ஸ், வண்ணக் கோலங்கள், சாதல் இல்லையேல் காதல், காட்டுல மாலை, மகாபாரதத்தில் மங்காத்தா, அமெரிக்காவில் அருக்காணி, எல்லோரும் வாங்க, எல்லாமே தமாஸ்தான், நம் குடும்பம், காட்டுல மழை,

நடித்த சில புகழ்பெற்ற திரைப்படங்கள்

S.Ve.Sekar-6

நினைத்தாலே இனிக்கும் (1979), வறுமையின் நிறம் சிவப்பு (1980), குடும்பம் ஒரு கதம்பம் (1981), மிஸ்டர் பாரத் (1986), மணல்கயிறு (1982), ஸ்பரிசம் (1982), சுபமுகூர்த்தம் (1983), பிரம்மச்சாரிகள் (1983), பூவே பூச்சுடவா(1985), நாம் (1985), சிதம்பர ரகசியம் (1986), சகாதேவன் மகாதேவன் (1988), டௌரி கல்யாணம் (1983), சிம்லா ஸ்பெஷல் (1982), சர்வம் சக்திமயம் (1986), பிறந்தேன் வளர்ந்தேன் (1986), அடுத்த வீடு (1986), பயணங்கள் முடிவதில்லை (1982), திருமதி ஒரு வெகுமதி (1987), எங்கவீட்டு ராமாயாணம் (1987), கதாநாயகன் (1988), வீடு மனைவி மக்கள் (1988), தங்கமான புருஷன் (1989), தங்கமணி ரங்கமணி (1989), மணந்தால் மகாதேவன் (1989), வேடிக்கை என் வாடிக்கை (1990), பொண்டாட்டியே தெய்வம் (1994), ஜீன்ஸ்(1998), கந்தா கடம்பா கதிரவேலா (2000), கிருஷ்ணா கிருஷ்ணா (2001), சிங்கமணி ரங்கமணி (2001) வல்லவன் (2006), ஜித்தன் (2005), வேகம் (2007)

குடும்பம்

எஸ். வி. சேகர் அவர்கள், உமா என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். இவர் தமிழ் திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஜி. ராமநாதன் என்பவரின் மகள் ஆவார். இவர்களுக்கு, அனுராதா என்கிற மகளும், அஷ்வின் என்கிற மகனும் உள்ளனர். இவர்களில் அஷ்வின் தனது தந்தையின் தயாரிப்பில் வேகம் என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

விருதுகள்

1991 – கலைவாணர் பதக்கம்.

1993 – கலைமாமணி பட்டம்.

மைலாப்பூர் அகாதமி மூலம் சிறந்த நகைச்சுவையாளர் விருது.

விஸ்டன் பத்திரிக்கையின் மூலம் சிறந்த நகைச்சுவையாளர் விருது.

நான்கு முறை சிறந்த அனைத்திந்திய நிகழ்ச்சி தயாரிப்பாளர் விருதை வென்றுள்ளார்.

அரசியல்

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, அக்கட்சியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் நாள் அ.தி.மு.க-விலிருந்து வெளியேறினார்.