ரஜினிகாந்த் 

Rajinikanth-1

கே.பாலசந்தர் இயக்கத்தில் தமிழில் வெளியான ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் தெலுங்கில் ‘அந்துலேனி கதா’ என்ற பெயரில் தயாரானபோது, தமிழில் ஜெய்கணேஷ் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் ரஜினி நடித்தார். இந்தப் படத்தில் ரஜினியின் சகோதரியாக நடித்தவர் யார் தெரியுமா? அவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த ஸ்ரீப்ரியாதான்!

தனது அலுவலகத்திற்கு வந்து தன்னை சந்திக்கச் சொன்ன பாலசந்தரிடம் முதன்முதலில் நடித்துக்காட்டியது கன்னட நாடகத்தில் இருந்து ஒரு பகுதியைத்தான். நன்றாக தமிழ்பேச கற்றுக்கொள் என்று சொன்ன பாலசந்தர் ரஜினியை ஒப்பந்தம் செய்தது ‘அபூர்வ ராகங்கள்’ படத்திற்கு மட்டுமல்ல.. ‘மூன்று முடிச்சு’, ‘அவள் ஒரு தொடர்கதை’ (தெலுங்கு) என மூன்று படங்களுக்கும் சேர்த்து தான். ஒரு நடிகனாக இவர் தேறிவிடுவார் என மூன்று படங்களுக்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்தது பாலசந்தரின் தீர்க்கதரிசனம்.

Rajinikanth-6

ரஜினியும் சிவகுமாரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்தபோதும்கூட இருவரும் இணைந்து ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘கவிக்குயில்’ என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளனர். இதில் ‘கவிக்குயில்’ படத்தில் சிவகுமாரின் காதலியாகவும், ரஜினியின் தங்கையாகவும் நடித்திருந்தவர் ஸ்ரீதேவி! .

1962ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் பதினைந்து வருடம் கழித்து கன்னடத்தில் ரீமேக் செய்யப்படபோது அதில் ஹீரோவாக நடித்தார் ரஜினி. இதில் ரஜினிக்கு ஜோடி மஞ்சுளா. இந்தப்படம் பின்னர் தமிழில் ‘குறிஞ்சி மலர்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியானது.

முத்துராமன் நடித்த ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டபோது தமிழில் தேங்காய் சீனிவாசன் நடித்த கதாபாத்திரத்திற்கு கன்னடத்தில் நடித்தவர் நம்ம சூப்பர் ஸ்டார்தான். இதில் நடித்தபோது ரீடேக் இல்லாமல் எல்லா ஷாட்டுகளையும் ஒரே டேக்கில் ஓ.கே. வாங்கினாராம் ரஜினி!

மலையாளத்தில் ‘அலாவுதீனும் அல்புத விளக்கும்’, ‘கர்ஜனம்’ என இரண்டு படங்களில் நேரடியாக நடித்துள்ளார் ரஜினி. ஒருபக்கம் பார்த்தால் இவை இரண்டுமே தமிழ், மற்றும் மலையாளம் என ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட இரு மொழிப் படங்கள்தானே தவிர, மலையாளத்திற்கென்றே தனியாக எடுக்கப்படவில்லை. .

தென்னிந்தியாவில் முதன் முதலில் கறுப்பு வெள்ளையில் சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்ட படம் ‘ஒந்து பிரேமட கதே’ என்கிற கன்னடப்படம். இதில் கதாநாயகனாக நடித்தவர் ரஜினி!

தெலுங்கில் முதன் முதலில் ரஜினி ஹீரோவாக நடித்த படம் ‘சிலகம்மா செப்பிண்டி’. இந்தப்படம் பின்னர் பாலசந்தர் டைரக்ஷனில் தமிழில் ‘நிழல் நிஜமாகிறது’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டபோது அதில் ஹீரோவாக நடித்தவர் கமல்.

‘மூன்று முடிச்சு’ திரைப்படத்தில் ‘‘மண வினைகள் யாருடனோ? மாயவனின் விதிவலைகள்…’’ பாடல்தான் ரஜினி வாயசைத்த முதல் திரையிசைப் பாடல். ரஜினியின் முதல் திரைப்படமான ‘அபூர்வராகங்கள்’ திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் தான் ரஜினியின் முதல் வாயசைவிற்கு இசையும் குரலும் கொடுத்தவர். .

Rajinikanth-4

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு ரஜினிக்கு கிடைக்கவில்லை. ஆனால் நடிகர் திலகத்துடன் சேர்ந்து ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’, ‘நான் வாழவைப்பேன்’, ‘நட்சத்திரம்’, ‘படிக்காதவன்’, ‘உருவங்கள் மாறலாம்’, ‘விடுதலை’, ‘படையப்பா’ என ஆறு படங்களில் நடித்துள்ளார்.

‘காதல்மன்னன்’ ஜெமினியுடன் இணைந்து ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்தில் மட்டுமே நடித்துள்ளார் ரஜினி.

அதிகம் படித்தவை:  குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய ரஜினிகாந்த்.! வைரலாகும் புகைப்படம்

ஆந்திர சூப்பர்ஸ்டாரும் மறைந்த முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவுடன் இணைந்து ரஜினி நடித்த ஒரே படம் ‘டைகர்’. இது ரஜினியின் ஐம்பதாவது படம் என்பது இன்னுமொரு சிறப்பு.

‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘அக்னி சாட்சி’, ‘நட்சத்திரம்’, ‘நன்றி மீண்டும் வருக’, ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘யார்’ ஆகிய படங்களில் நடிகர் ரஜினியாகவே நடித்திருக்கிறார் ரஜினி. .

1984ல் தியாகராஜன் நடித்த ‘மலையூர் மம்பட்டியான்’ படம் ஹிந்தியில் ‘கங்குவா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. தியாகராஜன் வேடத்தில் ரஜினி நடிக்க இந்தப் படத்தை ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான ராஜசேகர் இயக்கினார். தமிழிலும் இவர்தான் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் கமலின் மனைவி சரிகாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

1982ல் ரஜினி மூன்று வேடங்களில் நடித்த சூப்பர்ஹிட் படமான ‘மூன்று முகம்’, 1984ல் ஹிந்தியில் ‘ஜான் ஜானி ஜனார்தன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அங்கேயும் ரஜினிதான் ஹீரோவாக நடித்தார்.

29 வருடங்களுக்கு முன்பு எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் ரஜினி நடித்து வெளியான ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில் சிறுவனாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இளைய தளபதி விஜய். .

ஜாம்பவான்களான ரஜினி, கமல், அமிதாப் மூன்றுபேரும் இணைந்து நடித்தது ஒரே ஒரு ஹிந்திப்படத்தில் தான். படத்தின் பெயர் ‘கிராஃப்தார்’. இதில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அமிதாப்பும் ரஜினியும் நடித்திருந்தனர். அமிதாப்பின் சகோதரராக நடித்திருந்தார் கமல்.

1986ல் ரஜினி ஹீரோவாக நடித்த ஹிந்திப்படம் ‘பகவான் தாதா’. இந்தப் படத்தில் ரஜினியின் (வளர்ப்பு) மகனாக நடித்த சிறுவன்தான் இன்று 300கோடிகளுக்கு மேல் வசூலித்து கலக்கிக் கொண்டிருக்கும் ‘க்ரிஷ் -3’ படத்தின் ஹீரோவான ரித்திக் ரோஷன்.

ரித்திக் ரோஷனின் தந்தையும் ‘க்ரிஷ்’ படங்களை இயக்கியவருமான ராகேஷ் ரோஷன் எண்பதுகளில் ஹிந்தியில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். ரஜினி ஹிந்தியில் தொடர்ந்து நடித்த காலகட்டத்தில் அவருடன் இணைந்து அதிகப்படங்களில் நடித்தவர் என்ற பெருமை ராகேஷ் ரோஷனுக்கு உண்டு.

தமிழ் சினிமாவில் அகன்றதிரை எனப்படும் 70 எம்.எம்-ல் திரையிடப்பட்ட முதல் படம் ரஜினி நடித்த ‘மாவீரன்’. இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் ரஜினிதான். ஒருவகையில் இதுதான் அவரது முதல் தயாரிப்பும்கூட. கமலின் ‘புன்னகை மன்னனும்’ இந்தப் படமும் ஒரே தேதியில் தீபாவளி தினத்தன்று வெளியாகின. .

Rajinikanth-7

1988ல் ரஜினி ‘பிளட் ஸ்டோன்’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்தார். பாலிவுட் நடிகர்களுக்குக் கூட கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு ரஜினியை தேடி வந்தது. அவரது ஸ்டைலுக்காகத்தான். இந்தப் படத்தில் அவர் பேசிய ‘மணி மணி மணி’ என்ற வசனத்தை அஜீத், தான் நடித்த ‘மங்காத்தா’ படத்தில் கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் பேசியிருந்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்!

‘எந்திரன்’ வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை ரஜினியின் புதிய படம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் 1977 முதல் 1979 வரை 48 திரைப்படங்களில் நடித்துள்ளார் ரஜினி. குறிப்பாக 1980ல் 20 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார், அவற்றில் பெரும்பாலானவை நூறு நாட்கள் தாண்டி ஓடிய படங்கள்.

அதிகம் படித்தவை:  ரஜினிகாந்துக்கு சேரன் குடுத்த எச்சரிக்கை டுவிட்

1988-ல் ஒவ்வொரு மாத இடைவெளியில் ரஜினியின் படங்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. ‘தர்மத்தின் தலைவன்’ (24.9.88), ‘பிளட் ஸ்டோன்’ (7.10.88), ‘கொடி பறக்குது’ (8.11.88) ஆகிய படங்கள் இதற்கு உதாராணம். .

‘கொடி பறக்குது’ படத்தில் ரஜினிக்கு சவால் விடுகிற மாதிரியான ஒரு வில்லனை பாரதிராஜா தேடிக்கொண்டிருந்தபோது “எதுக்கு பாரதி வெளியில அலைஞ்சுட்டு இருக்கீங்க? அதான் நம்ம மணிவண்ணன் இருக்காரே… அவரையே வில்லன் ஆக்கிடுங்க”ன்னு சொல்லி, அவரை ஒரு நடிகனாக அரிதாரம் பூச வைத்தது ரஜினிதான்.

மணிவண்ணனின் மகள் திருமணத்துக்கு அவரது குருவான பாரதிராஜா வந்திருந்து மணமக்களை வாழ்த்தினாலும், மாப்பிள்ளை கையில் தாலி எடுத்துக் கொடுத்தவர் ரஜினிதான். இத்தனைக்கும் மணிவண்ணனின் திருமணத்தை நடத்தி வைத்தது பாரதிராஜாதான். ஆனாலும் தன் குருநாதரைவிட ஒருபடி மேலாக ரஜினியை மரியாதையான ஸ்தானத்தில் வைத்து நட்பு பாராட்டினார் மணிவண்ணன்.

இந்தியாவில் முதன்முதலில் அனிமேஷன் கேரக்டர்களை பயன்படுத்திய படத்திலும் ரஜினிதான் ஹீரோ. அந்தப்படம் ‘ராஜா சின்ன ரோஜா’. .

50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள நகைச்சுவை நடிகர் மனோபாலா ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கியிருக்கிறார். அது ‘ஊர்க்காவலன்’. அதேபோல் குடும்பப்பாங்கான படங்களை இயக்கிவந்த, அதிலும் குறிப்பாக மோகன், விஜயகாந்த் ஆகியோரின் ஃபேவரைட் இயக்குனரான ஆர்.சுந்தர்ராஜனும் ரஜினியை வைத்து ‘ராஜாதிராஜா’ படத்தை இயக்கியுள்ளார்.

2003ல் வெளியான ‘பாபா’ படத்தில் ரஜினியுடன் (ஜோடியாக) நடித்தார் மனிஷா கொய்ராலா. ‘பம்பாய்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான மனிஷா, 1993லேயே ‘இன்சானியத் கே தேவதா’ என்ற ஹிந்திப் படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

1986ல் ‘பகவான் தாதா’ என்ற ஹிந்திப் படத்தில் ரஜினியுடன் நடித்திருந்த டேனி டென்சொங்போ தான் 25 வருடம் கழித்து ‘எந்திரன்’ படத்தில் புரஃபெஸர் போராவாக மீண்டும் ரஜினியுடன் நடித்தார். .

பாலிவுட்டின் ‘எவர்கிரீன் ஸ்டார்’ ஆமீர்கான் ரஜினியுடன் ஹிந்தியில் இணைந்து நடித்த ஒரே படம் ‘ஆட்டன்க் ஹி ஆட்டன்க்’.

‘பாக்ய தேவதா’ என்ற வங்காள மொழிப் படத்திலும் நடித்திருக்கிறார் ரஜினி. மிதுன் சக்கரவர்த்தி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை இயக்கிவர் நம் தமிழ் சினிமா டான்ஸ் மாஸ்டர் ரகுராம்தான்.

ரஜினி வளர்ந்து ‘சூப்பர்ஸ்டார்’ ஆன காலகட்டத்தில் செலக்டிவான படங்களில் மட்டுமே நடிக்க ஆரம்பித்தார். அதற்கு காரணமாக மூன்று விஷயங்களை வரிசைப்படுத்தினார். முதலாவது தயாரிப்பு நிறுவனத்தின் தரம், இரண்டாவதாக கதை, மூன்றாவது (தான்) பணம். அளவான படங்களில் நடித்ததுபோக மீதம் இருந்த நேரத்தைத்தான் ஹிந்திப்படங்களுக்கு ஒதுக்கினார்.

ரஜினி நடித்த ஹிந்திப் படங்களில் பெரும்பாலானவை இரண்டு அல்லது மூன்று ஹீரோக்களுடன் சேர்ந்துதான். தமிழில் சூப்பர்ஸ்டாராக நடித்துக்கொண்டே ஹிந்தியில் ஏன் இப்படி இரண்டு, மூன்று பேரில் ஒருவராக நடிக்கிறீர்கள் என கேட்டபோது, “ஹிந்தியில் அமிதாப் பச்சன் ஒருவருக்குத்தான் (அந்த சமயத்தில்) தனி ஹீரோவா நடிச்சா டிஸ்ட்ரிபியூட்டர் வர்றாங்க. மத்தவங்க படம்னா கூட நடிக்கிறது யாருன்னு கேட்குறாங்க.. இதுதான் காரணம்” என்றாராம்.