காளி என்.ரத்தினம் -சி.டி.ராஜகாந்தம்

தமிழ்த்திரை உலகில் என்.எஸ்.கிருஷ்ணன்- டி.ஏ.மதுரம் ஜோடி கொடிகட்டிப் பறந்த காலக்கட்டத்தில், அவர்களுக்கு அடுத்து புகழ் பெற்று விளங்கிய ஜோடி காளி என்.ரத்தினம் – சி.டி.ராஜகாந்தம்.

காளி என்.ரத்தினத்தின் சொந்த ஊர் கும்பகோணம் அருகே உள்ள மலையப்பநல்லூர் கிராமம். தந்தை நாராயணன். விவசாயி. தாயார் தங்கத்தம்மா. ரத்தினம் 5-ம் வகுப்பு படித்தபோது அவரது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, கும்பகோணத்தில் ஒரு பட்டு ஜவுளிக்கடையில் கணக்கு எழுதும் சிறுவனாக வேலைக்கு சேர்ந்தார்.

Kali N-Rathinam-C.T,Kantham-1

அதன்பின்னர் தப்பா வெங்கடாசலபதி பாகவதரின் தஞ்சை பாலமோகன அபிநயசித்தி விலாச சபாவில் சேர்ந்தார். அப்பொழுது 12 வயதான ரத்தினத்திற்கு முதலில் பெண்வேடங்கள் வழங்கப்பட்டன. அவரது வேடங்கள் மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டதால், பிறகு முக்கிய வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சில ஆண்டுகளில் அந்த கம்பெனியின் பெயர் ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’ என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் பலஊர்களுக்கு சென்று நாடகங்களை நடத்தினர். அப்பொழுது ‘ராஜபார்ட்’ வேடங்களில் ரத்தினம் நடிக்கத் தொடங்கினார்.

அதன் பின்னர் ரத்தினத்திற்கு தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டது. அதன்காரணமாக நகைச்சுவை வேடங்களில் நடிக்கத்தொடங்கினார். அவரது காமெடி வேடம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கோவலன் நாடகத்தில், காளி வேடம் போட்டு நடித்தார். காளி வேடத்தில் நடிப்பதில் ரத்தினத்திற்கு நிகர் யாரும் இல்லை என்று பலரும் போற்றியதால், ‘காளி என்.ரத்தினம்’ ஆனார்.

Kali N-Rathinam-C.T,Kantham-2

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நடத்திய நாடகங்களில் ‘பதிபக்தி’ நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இந்த நாடகம் சினிமா படமாகத் தயாரிக்கப்பட்டு, 1936-ல் வெளிவந்து வெற்றி பெற்றது. இதில், ‘துப்பறியும் சந்தான கிருஷ்ணன்’ என்ற வேடத்தில் காளி என்.ரத்தினம் நடித்தார்

(என்.எஸ்.கிருஷ்ணனும், காளி என்.ரத்தினமும் சம காலத்தவர்கள். என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த முதல் படம் ‘மேனகா’. இது 1935-ல் வெளிவந்தது. 1936-ல் வெளிவந்த ‘வசந்தசேனா’ படத்தில் டி.என்.மதுரம் ஜோடி சேர்ந்தார்.)

சந்திரகாந்தா 1936-ல், துப்பறியும் கதைகள் எழுதுவதில் புகழ் பெற்றிருந்த ஜே.ஆர்.ரங்கராஜூ எழுதிய ‘சந்திரகாந்தா’ என்ற படத்தை ஜுபிடர் பிக்சர்சார் படமாகத் தயாரித்தனர். இதில் போலி மடாதிபதியாக (பிரதான பாத்திரத்தில்) காளி என்.ரத்தினம் நடித்தார்.

படம் வெற்றி பெற்றது. காளி என்.ரத்தினம் பெரும் புகழ் பெற்றார். இந்தப் படத்தில், பி.யு.சின்னப்பா சுண்டூர் இளவரசன் என்ற சிறிய வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் காளி என்.ரத்தினத்தை நேஷனல் மூவிடோன் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்தனர்.

ராஜமோகன், பஞ்சாப்கேசரி ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் மாத்ருபூமி, பாண்டுரங்கா, ரம்பையின்காதல் போன்ற படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து புகழ்பெற்றார்.

மாடர்ன் தியேட்டர்சார் 1940-ல் ‘உத்தமபுத்திரன்’ படத்தைத் தயாரித்தனர். இதில் பி.யு.சின்னப்பா இரட்டை வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றார். இந்தப் படத்தில்தான், காளி என்.ரத்தினத்துடன் சி.டி.ராஜகாந்தம் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்தார்.

Kali N-Rathinam-C.T,Kantham-3

அதன்பின், மாடர்ன் தியேட்டர்சாரின் பெரும்பாலான படங்களில் இந்த ஜோடி நகைச்சுவை விருந்தளித்தது. ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி’, ‘போஜன்’, ‘பர்மாராணி’ முதலான படங்களில் இவர்கள் நகைச்சுவை பிரமாதமாக அமைந்தது.

ஏவி.மெய்யப்ப செட்டியார் தயாரித்த ‘சபாபதி’ படத்தில், காளி என்.ரத்தினம் அசட்டு வேலைக்காரனாக பிரமாதமாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

சி.டி.ராஜகாந்தத்தின் சொந்த ஊர் கோவை. பெற்றோர்: திரவியம் ஆசாரியார் – மருதாயி. 1917 ஜனவரி 5-ந்தேதி பிறந்தார். ராஜகாந்தத்தின் 20-வது வயதில் திருமணம் நடந்தது. கணவர் பெயர் அப்புக்குட்டி.

ராஜகாந்தம் தன் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டார். அங்கு நடிகை எஸ்.ஆர்.ஜானகி குடிவந்தார். ராஜகாந்தத்தின் துடிப்பான பேச்சைக் கண்ட அவர், ‘இந்தப் பெண் நாடகத்தில் நடித்தால், பெரிய நடிகையாகி விடுவாள்’ என்று நினைத்தார்.

ராஜகாந்தத்தின் தாயாரிடம் பேசி, அனுமதி பெற்றார். அதன்பின், ராஜகாந்தம் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

நாடகங்களில் நடித்து வந்த ராஜகாந்தம், 1939-ல் மாடர்ன் தியேட்டர்சாரும் சேலம் ஸ்ரீகிருஷ்ணா பிலிம்சாரும் இணைந்து தயாரித்த ‘மாணிக்க வாசகர்’ படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின் மாடர்ன் தியேட்டர்சார் தயாரித்த ‘சத்தியவாணி’ படத்தில் நகைச்சுவை வேடத்தில் சிறப்பாக நடித்தார். அதைப் பார்த்து விட்டுத்தான், காளி என்.ரத்தினம் தனது படங்களில் ராஜகாந்தத்தை ஜோடியாக நடிக்க வைத்தார்.

Kali N-Rathinam-C.T,Kantham-4

எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி முயற்சி செய்து கொண்டிருந்த காலத்தில், அவருக்கு உதவியவர் காளி என்.ரத்தினம். அதன் காரணமாக, காளி என்.ரத்தினத்திடமும், சி.டி.ராஜகாந்தத்திடமும் மிகுந்த அன்பும், மதிப்பும் வைத்திருந்தார், எம்.ஜி.ஆர்.

காளி என்.ரத்தினம் புகழோடு இருந்தபோதே காலமாகி விட்டார். அதன்பின் சி.டி.ராஜகாந்தம் தனியாகவும் சில படங்களில் நடித்தார். வில்லி வேடங்களிலும் அவர் திறமையாக நடித்தார்.

என்.எஸ்.கிருஷ்ணன் – டி.ஏ.மதுரம் ஜோடியைப் போல, காளி என்.ரத்தினமும் ராஜகாந்தமும் சொந்தக் குரலில் பாடியது குறிப்பிடத்தக்கது.