சுருளிராஜன்

Suruli Rajan-3

சுருளிராஜன் பெரியகுளத்தைச் சேர்ந்தவர். 14-1-1938-ல் பிறந்தார்.

தந்தை பெயர் பொன்னையா பிள்ளை. பெரியகுளத்தில் “கணக்குப்பிள்ளை வீடு” என்றால், அது சுருளிராஜன் வீட்டைக் குறிக்கும்.

எம்.ஆர்.ராதாவின் குரல் எப்படி வித்தியாசமானதோ, அதுபோல் மாறுபட்ட குரல் வளம் கொண்டவர் சுருளிராஜன். ஒரு காலக்கட்டத்தில், நகைச்சுவை நடிப்பில் பெரும் புகழ் பெற்று விளங்கினார். ஒரே ஆண்டில் (1980) 50 படங்களில் நடித்தார்.

சுருளிராஜன் சிறுவனாக இருந்தபோதே, அவர் தாயும், தந்தையும் இறந்து விட்டனர். பண வசதி இல்லாத காரணத்தால் சுருளிராஜனின் படிப்பு 5-ம் வகுப்புடன் நின்றுவிட்டது. அதனால் சுருளிராஜன் மதுரையில் அவர் அண்ணன் வீட்டில் வளர்ந்தார்.

அங்கு ஒரு கார் ஷெட்டில் மெக்கானிக் வேலை பார்த்தார். இதில் கிடைக்கும் வருமானம் முழுவதையும் சினிமா பார்ப்பதில் செலவிட்டார்.

Suruli Rajan-4

சினிமா, நாடகங்களில் நடிக்க வேண்டும் என்று அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. மதுரை பகுதியில் நடந்து கொண்டிருந்த நாடகங்களில் சிறு வேடங்கள் ஏற்று நடித்தார். 1959-ம் ஆண்டு சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்தார்.

பல கம்பெனிகளில் ஏறி இறங்கி சினிமா சான்ஸ் கேட்டார். அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. கையில் பணமும் இல்லை. பல நாட்கள் பட்டினி கிடந்தார்.

அதனால் மூட்டைப்பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள அவர் முயற்சி செய்தார். அப்போது ஒருவர் நாடகத்தில் நடிக்க அவரை அழைத்ததால் தற்கொலை முடிவை கைவிட்டார்.

பின்னர் “அய்யா தெரியாதய்யா” ராமராவ், எம்.என்.திரவுபதி ஆகியோரின் நாடகக் குழுவில் சேர்ந்தார். அதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. சி.ஏ.கே.தேவர், டி.என்.பாலு நாடகக் குழுவில் அப்பா வேடங்களில் நடித்தார்.

1962-ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் தி.மு.கழக தேர்தல் நிதிக்காக கருணாநிதி “காகிதப்பூ” என்ற நாடகத்தை நடத்தினார். இதில் சுருளிராஜன் நடித்தார்.

“ஞான சவுந்தரி”, “விஜயபுரி வீரன்” முதலிய படங்களைத் தயாரித்த ஜோசப் தளியத், சுருளிராஜன் நடித்த ஒரு நாடகத்தைப் பார்த்தார். சுருளிராஜனின் நடிப்பும், வித்தியாசமான குரலும், வசனம் பேசும் முறையும் அவரைக் கவர்ந்தன.

தான் தயாரிக்க இருந்த “காதல் படுத்தும் பாடு” படத்தில், நகைச்சுவை வேடத்தில் நடிக்க சுருளிராஜனை ஒப்பந்தம் செய்தார்.

கலைஞானம் கதை – வசனம் எழுதிய முதல் படம் இது. வாணிஸ்ரீ, எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் அறிமுகமான படமும் இதுதான். படத்தின் கதாநாயகன் ஜெய்சங்கர்.

Suruli Rajan-6

1966-ல் வெளிவந்த “காதல் படுத்தும் பாடு” வெற்றிப்படமாக அமைந்தது. சுருளிராஜனின் நகைச்சுவை, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதன்பின் “நான்”, “மூன்றெழுத்து”, “பால்மனம்”, “குழந்தை உள்ளம்”, “அஞ்சல் பெட்டி” முதலான படங்களில் நடித்தார்.

எம்.ஜி.ஆர். நடித்த “எங்க வீட்டு பிள்ளை” படத்தில், “நான் ஆணையிட்டால்…” பாடல் காட்சியில் இடம் பெற்றவர்களில் சுருளிராஜனும் ஒருவர்.

ஏ.பி.நாகராஜன் தயாரித்த “திருமலை தென்குமரி” படத்தில், மனோரமாவுடன் இணைந்து நகைச்சுவை விருந்தளித்தார்.

திருமலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் காட்சியில் சுருளிராஜனின் நகைச்சுவை, ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

தரையில் உருண்டு கொண்டே வரும் சுருளிராஜன், திடீரென்று எழுந்து, “வத்திப் பொட்டியையும் பதினைந்து பைசா துட்டையும் மறந்துவிட்டு வந்துட்டேன். அதை எடுத்துட்டு வர்றேன்” என்று ஓடுவார்.

நினைத்தாலே, சிரிக்க வைக்கும் காட்சி. தொடர்ந்து “தேன்கிண்ணம்”, “யாரைத்தான் நம்புவது”, “அக்காவுக்கு கல்யாணம்” என்று பல படங்களில் நடித்தார்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த “ஆதிபராசக்தி” மூலம் பெரும் புகழ் பெற்றார்.