முதல் முதலாக மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அம்பிகா - Cinemapettai
Connect with us

Cinemapettai

முதல் முதலாக மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அம்பிகா

Entertainment | பொழுதுபோக்கு

முதல் முதலாக மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அம்பிகா

அம்பிகா

Ambika-6

தமிழ், மலையாளம் உள்பட 150 படங்களில் நடித்த அம்பிகா, மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர்.

அம்பிகாவின் சொந்த ஊர் கேரளமாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள கல்லரா. தந்தை குஞ்சன் நாயர், தாயார் சரசம்மா. குஞ்சன் நாயர் மின்சாரத்துறையில் பணிபுரிந்தார். சரசம்மா காங்கிரஸ் கட்சியில் பிரபலமானவராக இருந்தார்.

அம்பிகா தான் வீட்டில் மூத்த பெண். அவருடன் பிறந்தவர்கள்: மல்லிகா, சந்திரிகா (நடிகை ராதா), அர்ஜுன் (புதுநெல்லு புதுநாத்து படத்தின் கதாநாயகன் ராமராஜன்), சுரேஷ் (பரதேசி தெலுங்கு படத்தின் கதாநாயகன்).

அம்பிகாவுக்கு சிறுவயதிலேயே சினிமா மீது மோகம் ஏற்பட்டது. மிகவும் நினைவாற்றல் கொண்டதால், ரேடியோவில் ஒரு முறை பாட்டைக்கேட்டால் உடனடியாக அதை அப்படியே திரும்ப பாடும் ஆற்றலுடன் விளங்கினார்.

தினமும் காலையில் 7.45 மணியில் இருந்து 8 மணிக்குள் ரேடியோவில் லலிதசங்கீதம் என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். அதில் பிரபல இசையமைப்பாளர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் என்பவர் பாடல்களை பாடும் விதம் பற்றி விளக்குவார். அவர் சொல்வதை அப்படியே ஒரு நோட்டில் எழுதத்தொடங்கி விடுவார், அம்பிகா. பள்ளிக்கு செல்லும் போதும் அதையே தான் நினைத்துக்கொண்டு செல்வார்.

இது பற்றி அம்பிகா கூறியதாவது:-

Ambika-1

“ரேடியோவில் கற்றுக்கொண்ட பாடல்களை, பள்ளியில் நடத்தப்படும் விழாக்களில் கலந்து கொண்டு ராகத்துடன் பாடுவேன். எனக்கு அப்போது முதல் பரிசு அல்லது இரண்டாவது பரிசு கிடைக்கும். நான் பாட்டுப்போட்டியில் கலந்து கொள்ளும் போது எனக்கு போட்டியாக உத்தமன் என்ற மாணவனும் பாட்டுப்போட்டிக்கு வருவான். அவன் பாடல்களை பெண் குரலில்பாடி பரிசை தட்டிச்சென்று விடுவான். அதனால் சில நேரங்களில் நான் முதல் பரிசை இழந்ததும் உண்டு. அதனால் அவன் மீது எனக்கு எரிச்சலும் அதிகமாக உண்டு.

நான் பாடிய அதே பாடலை மற்றொரு பள்ளியில் படித்த என் சகோதரி ராதாவும் பாடி பரிசுகளை வாங்கி வருவாள். அப்போது நான் மிமிக்ரி, கவிதைபோட்டி, நடிப்பு, நடனப்போட்டி, நாடகம் ஆகிய அனைத்திலும் பங்கேற்பேன். விளையாட்டில் எனக்கு ஈடுபாடு கிடையாது. ஆனால் விளையாட்டில் ராதாவுக்கு அதிக ஈடுபாடு உண்டு. நான் சராசரி மாணவிதான், எங்கள் வீட்டில் வாரம் ஒரு நாள் சனிக்கிழமை பொழுது போக்கு நிகழ்ச்சி நடக்கும். அப்போது அனைவரும் குடும்பத்தோடு ஒன்றாக இருந்து அவரவர் திறமையை காண்பிப்போம். நான் நடனம் ஆடுவேன், மேலும் நடித்துக்காட்டுவேன். என் தங்கை மல்லிகாவுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிடுவாள். ராதா நடனம் ஆடுவாள். எங்களை பெற்றோர் ஊக்கப்படுத்துவார்கள்.”

இவ்வாறு அம்பிகா கூறினார்.

Ambika-4

சிறுமியாக இருக்கும் போது அம்பிகா தாயாரை வற்புறுத்தி, சினிமாப் படப்பிடிப்பை பார்க்க அழைத்து செல்வார். ஆலப்புழையில் நடந்த ஒரு படசூட்டிங்கை பார்க்க சென்றனர். படத்தில் கமலஹாசன், சோமன் ஆகியோர் நடித்துக்கொண்டு இருந்தனர்

அம்பிகாவை பார்த்த கமலஹாசன், “நீ என்னுடன் நடிக்கிறாயா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். “நடிக்கிறேன்” என்றார், அம்பிகா.

“நீ ஸ்ரீவித்யா மாதிரி இருக்கிறாய். சினிமாவில் நடிக்கலாம். எதிர்காலத்தில் பெரிய நடிகையாக வரலாம்” என்று கமல் கூறினார்.

அதைக்கேட்டு, அம்பிகா மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

இந்தக் காலக்கட்டத்தில், மலையாளப்பட உலகில் ஷீலா மிகப்புகழ் பெற்ற நடிகையாக விளங்கினார். அவரைப்போல் பெரிய நடிகையாக வரவேண்டும் என்று அம்பிகா கனவு கண்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் நீலா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் “சோட்டாணிக்கரா” என்ற படத்தை எடுத்தனர். அந்தப் படத்தின் படப்பிடிப்பை காண தாயாருடன் அம்பிகா சென்றார். அங்கு பட அதிபர் சுப்பிரமணியனும், டைரக்டரும் இருந்தார்கள்.

“என் மகள் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறாள். வாய்ப்பு கொடுப்பீர்களா?” என்று கேட்டார்.

மேக்கப் போட்டு, “டெஸ்ட்” எடுத்துப் பார்த்தார்கள். அம்பிகாவின் அழகும், நடிப்பும் அவர்களுக்குப் பிடித்திருந்ததால், அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். மங்கைப் பருவம் எய்திய பிறகு, நடிப்பதை நிறுத்தினார்.

ஒருநாள் வீட்டுக்கு அருகே உள்ள தியேட்டரில் அம்பிகா சினிமா பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, படத்தில் நடிப்பதற்கு அழைப்பு வீடு தேடி வந்தது. தியேட்டருக்கு ஆள் அனுப்பி, அம்பிகாவை அழைத்து வரச்சொன்னார், சரசம்மா. சற்று நேரத்தில் அம்பிகா வந்தார்.

எம்.முகுந்தன் என்ற பிரபல எழுத்தாளர் எழுதிய “சீதா” என்ற நாவல், திரைப்படமாகத் தயாரிக்கப்பட இருப்பதாகவும் அதில் அம்பிகா நடிக்க வேண்டும் என்றும், வீடு தேடி வந்த படக்கம்பெனியினர் கேட்டுக்கொண்டனர். அம்பிகாவும், அவர் தாயாரும் சம்மதம் தெரிவித்தனர். ஒப்பந்தம் கையெழுத்து ஆயிற்று.

Ambika-3

கேரள பட உலகில் ஏற்கனவே ஒரு அம்பிகா (பத்மினியின் உறவினர்) இருந்தார். எனவே அம்பிகாவின் பெயரை மாற்றவேண்டும் என்று சிலர் கூறினார்கள். சீதா, பிருந்தா, பிரியா, சந்தியா என்ற பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன.

ஆனால், பெயர் மாற்றத்துக்கு அம்பிகாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. எனவே, அம்பிகா என்ற பெயரிலேயே நடித்தார். அப்படம் வெற்றி பெறவே, தொடர்ந்து மலையாள படங்களில் நடித்தார்.

படங்களில் நடித்துக்கொண்டே, “பி.ஏ.” வரலாறு படித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top