சரத்குமார்-விஜயகாந்த்

Sarathkumar-Vijayakanth Releationship-2

பெங்களூர் தினகரனில் ஏதேதோ வேலை பார்த்துக் கொண்டிருந்த சரத்குமார் 1987 ல் சினிமா ஆசையுடன் சென்னை வந்திருந்தார். அப்போது தனக்க அறிமுகமான சிலருடன் இணைந்து கண் சிமிட்டும் நேரம் என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் சின்னதொரு வேடத்திலும் சரத்குமார் நடித்துக் கொண்டிருந்தார்.

படம் உருவாகிக் கொண்டிருந்த போதே படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஓடிவிட, தனது சொத்துகளை அனைத்தையும் அடமானம் வைத்து சரத்குமார் கண் சிமிட்டும் நேரம் படத்தை தயாரித்து முடித்தார். 1988ல் அப்படம் வெளியாகி படு தோல்வி அடைந்ததுடன் சரத்குமாரின் அனைத்து சொத்துகளும் பறிபோய்விட்டது. இதனால் அப்போது திரையுலகில் பிரபலமாக இருந்த விஜயகாந்தை வைத்து திரைப்படம் ஒன்றை தாயரித்தால் இழந்ததை பெற்றுவிடலாம் என்று முடிவெடுக்கிறார்.

விஜயகாந்தை பலமுறை சந்தித்து கால்ஷீட் கேட்ட நிலையில், சரத்குமாரின் பர்சனாலிட்டியை மனதில் கொண்டு புலன் விசாரணை திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை வழங்க விஜயகாந்த முன்வந்தார். அதனை ஏற்று வில்லன் வேடத்தில் நடிக்க, திரையுலகில் ஓரளவிற்கு தெரிந்த நடிகராக சரத்குமார் மாறினார்.

ஆனால் அதன் பின்னரும் சரியான வாய்ப்பு கிடைக்காத நிலையில் தொடர்ந்து தனது சிறையில் பூத்த சின்னமலர், சந்தனக்காடு ஆகிய படங்களில் சரத்குமாருக்கு முக்கியமான வேடங்களை விஜயகாந்த் கொடுத்து ஊக்குவித்தார். அத்துடன் நடிகர் சத்யராஜிற்கும் சரத்குமாரை அறிமுகப்படுத்தி வைத்து வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தார் விஜயகாந்த்.

ஒரு கட்டத்தில் சரத்குமார் மீது கொண்ட நல்லெண்ணம் காரணமாக தான் சொந்தமாக தயாரித்த தாய் மொழி படத்தில் கதாநாயகன் வாய்ப்பும் கொடுத்து மகிழ்ந்தார். பின்னர் சூரியன் திரைப்படத்தின் கதையை தம்மிடம் இயக்குனர் பவித்ரன் கூற, அந்த படத்தை சரத்குமாரை வைத்து இயக்குமாறு சிபாரிசு செய்தார் விஜயகாந்த். இந்த சூரியன் திரைப்படம் தான் சரத்குமார் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. சரத்குமார் ஹீரோவானார்.

அப்போது விஜயகாந்த் உதவியிருக்கவில்லை என்றால் சரத்குமார் இப்போது எம்.எல்.ஏவாகி அ.தி.மு.கவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டிருக்க முடியாது.

சரத்குமார் நடிகர் சங்க தலைவர் ஆனது எப்படி?

கோடிக்கணக்கில் கடனில் இயங்கிக் கொண்டிருந்த நடிகர் சங்க தலைவர் பதவியை ஏற்க பிரபல நடிகர்கள் பலரும் தயங்கிய நிலையில் விஜயகாந்த் அந்த பதவியை ஏற்று செயல்பட முன் வந்தார். விஜயகாந்த் தலைவராக ஒப்புக் கொண்டதால், பொதுச் செயலாளர் பதவியை பிடிக்க ராதாரவி, சரத்குமார், வாகை சந்திரசேகர், விஜயகுமார் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும் ராதாரவி, விஜயகுமாரை சமாதானம் செய்து, சரத்குமாரை பொதுச்செயலாளராக்கினார் விஜயகாந்த்.

Sarathkumar-Vijayakanth Releationship

 

வாகை சந்திரசேகருக்கு பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டது. தே.மு.தி.கவை தொடங்கிய காரணத்தினால் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விஜயகாந்த் விலகிவிட, அப்பதவியை பிடிக்க நடிகர்கள் சரத்குமார், ராதாரவி இடையே கடும் போட்டி நிலவியது. நடிகர் பிரபுவை நடிகர் சங்க தலைவராக்க ரஜினி முயற்சி செய்து கொண்டிருந்தார். சரத்குமார், விஜயகாந்தின் உதவியை நாடினார். விஜயகாந்த், ராதாரவி, ரஜினி ஆகியோரை நேரில் சந்தித்து சரத்குமாருக்கு தலைவர் பதவியை பெற்றுக் கொடுத்தார்..