Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாறு புத்தகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு தேதி குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து இன்று வரை மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருக்கிறார். இந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவரை ரசிகர்கள் செல்லமாக இசைப்புயல் என அழைக்கின்றனர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். 2009ம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று மந்திரச்சொல்லுக்கு சொந்தக்காரர் ஆனார்.
இவை தவிர, இசைத்துறை சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் ‘கிராமி’ விருதினை இருமுறையும், ‘பாஃப்டா’ மற்றும் கோல்டன் குளோப் விருதை தலா ஒரு முறையும், ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக்கல்வி மையமான ‘ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து’ வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட 6 கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் வெற்றி பாதை புத்தகமாக தயாராகி வருகிறது. பென்குயின் பதிப்பகம் புத்தகத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட இருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மானின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் கிருஷ்ணா திரிலோக் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்துக்கு ’நோட்ஸ் ஆப் எ டிரீம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
