Tamil Cinema News | சினிமா செய்திகள்
வடிவேலு – பார்த்திபன் கூட்டணியின் ரசிகரா நீங்கள்… இது உங்களுக்கு தான்

தமிழ் சினிமாவின் காமெடிகளுக்கு பஞ்சம் இல்லாத வடிவேலு- பார்த்திபன் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கோலிவுட்டில் சில காமெடி ஜோடிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். அப்படி ஒரு கூட்டணி தான் பார்த்திபன் – வடிவேலு. பார்த்திபன் செய்யும் தகுடுதித்தங்களை பார்த்து வடிவேலு முழிக்கும் முழியை இன்னும் ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள். 2005ம் ஆண்டு குண்டக்க மண்டக்க படத்தில் தொடங்கிய இவர்கள் பயணம் தொடர்ச்சியாக பல படங்களில் நீடித்தது. இதில், உன்னருகே நானிருந்தால், காதல் கிறுக்கன், வெற்றி கொடி கட்டு உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் பெரிய ஆதரவை பெற்றது. கோலிவுட்டில் சில ட்ரேட்மார்க் ஜோடிகளின் பட்டியலில் இவர்கள் பெயரும் இணைந்தது.
ஆனால், நடிகராக பார்த்திபன் நடிப்பதை விடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பதை வழக்கமாக்கி கொண்டு இருக்கிறார். அரசியலில் ஈடுபட்ட வடிவேலுவிற்கும் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர்களை பல நாட்களாக மிஸ் செய்த ரசிகர்களுக்கு ஒரே படத்தில் பார்க்கும் வாய்ப்பை இயக்குனர் சுராஜ் உருவாகி இருக்கிறார்.
விமல் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வடிவேலு காமெடி நடிகராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அதே படத்தில் பார்த்திபனும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கலகலப்பாக காமெடி ஜனரில் உருவாகும் இந்த படத்தில் விமல் – வடிவேலு இருவரும் போலீசாக நடிக்கின்றனர். விமல், வடிவேலு மட்டுமே இணைந்து நடிக்க இருக்கிறார்கள் எனவும் அவர்களுடன் பார்த்திபன் இணைந்து நடிக்கும் காட்சிகள் எதுவும் படத்தில் இடம்பெறாது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருந்தும் இந்த நடிகர்களை ஒரே படத்தில் பார்க்கும் வாய்ப்பே பெரிது என்கிறது ரசிகர் படை. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
