வாழ்நாள் முழுக்க தத்துவ கதைகளும், ஆன்மீக அட்வைஸ்களுமாக இருக்கும் ரஜினிதான், இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது நடிகர். போகட்டும்… இப்போது நாம் சொல்ல வருவது, ரஜினிக்காக காத்திருந்த ஒரு படம், அரவிந்த்சாமி கைக்கு போனது எப்படி என்பது பற்றிதான்.

சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படம் அங்கு தாறுமாறு ஹிட். அதற்கப்புறம் அதே படத்தின் உரிமையை யார் வாங்கினாலும் அதை தானே இயக்குவது போல ஒரு ஒப்பந்தத்தை போட்டு வைத்திருக்கும் டைரக்டர் சித்திக், ரஜினியை சந்தித்து பேசி வந்தார். சென்னையில் பிரத்யேகமாக அப்படத்தை திரையிட செய்து கண்டு களித்த ரஜினி, “நான் ரெடி. மிச்ச வேலையை பாருங்க” என்று கூறியிருந்தார்.

ஆனால் மம்பட்டி கூராக இருந்தாலும், மனைக்கட்டு ஜோராக இல்லையே? சில பல காரணங்களால் இப்படத்தின் மீது வைத்திருந்த ஆசையை மூட்டை கட்டிவிட்டு, கபாலி படத்தில் நடிக்கப் போய்விட்டார் ரஜினி. வேறு வழியில்லாமல் இன்னொரு பெருத்த மீனுக்காக காத்திருந்த சித்திக், தன் பொறுமைக்கு நற்பலன் பெற்றுவிட்டார். தற்போது இளைஞர்களின் எழுச்சி நாயகனாக மாறிவிட்ட அரவிந்த்சாமி, இந்தப்படத்தில் நடிப்பதாக கூறியிருக்கிறாராம்.

வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.