விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவின் நீண்டநாள் கனவு ஒன்று பிறந்தநாளில் நிறைவேறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் 2008ம் ஆண்டு ரப் நே பனா தி ஜோடி படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுஷ்கா சர்மா. அதே ஆண்டில் தான் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டிலும் கால் பதித்தார். இதை தொடர்ந்து, பிரபல நிறுவனத்திற்காக இவர்கள் நடித்த விளம்பரம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் காதல் கிசுகிசுவையும் கிளப்பியது. நீங்க பாட்டுக்கும் பேசுங்க சாமி என்பது போல இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருந்தனர். களத்தில் அக்ரோஷ மன்னனாக இருந்த விராட் தற்போது இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார். தொடர்ந்து, அனுஷ்காவும் வெற்றி படங்களில் நடித்து ஸ்டார் நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மிகவும் சீக்ரெட்டாக இருவரும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து மும்பையில் குடியேறி இருக்கும் இத்தம்பதி பல கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டையும் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரில் அனுஷ்கா சர்மா தனது கணவரின் தலைமையில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் போட்டிகளை காண நேரிலே வந்து விடுகிறார். சரியாக சோபிக்காத கோலியின் டீம் தோல்விக்கு எப்போதும் போல அனுஷ்காவே குற்றவாளியாக பழி சுமத்தப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று அனுஷ்கா சர்மா தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். தனது மனைவியின் பிறந்தநாள் பரிசாக நேற்று மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியை வென்று கொடுத்து அசத்தி இருக்கிறார் விராட்.

இதை போல, அனுஷ்கா சர்மாவிற்கு ஒரு நீண்ட நாள் கனவு ஒன்று இருக்கிறதாம். அது விரைவில் நிறைவேற இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மும்பைக்கு வெளியே விலங்குகள் காப்பகம் ஒன்றைப் புதிதாகக் கட்டி வருகிறேன். தனித்து விடப்பட்ட விலங்குகளைப் பாதுகாக்கவும் அன்பு செலுத்தவும் பராமரிக்கவும் இந்த முயற்சி என தெரிவித்துள்ளார்.