தமிழ்சினிமாவுக்கு இது ஆகாத காலம் போலிருக்கிறது. நா.முத்துகுமார் மறைந்த துக்கம் கூட இன்னும் ஆறவில்லை. அதற்குள் மறைந்துவிட்டார் கவிஞர் அண்ணாமலை. விகடன் குழுமத்தில் பத்திரிகையாளராக பணியாற்றி பின்பு சினிமா பாடல் ஆசிரியராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் அண்ணாமலை.

என் உச்சி மண்டையில சுர்ருங்குது… என்ற ஒரே பாடலின் மூலம் உச்சத்திற்கு போனவர், சுமார் 100 பாடல்கள் எழுதியிருக்கிறார். விஜய் ஆன்டனி படங்களில் அண்ணாமலையின் பங்கு நிச்சயம் இருக்கும். அதற்கப்புறம் விஜய்யே இவரை அழைத்து பாராட்டி என் படங்களில் நீங்க தொடர்ந்து இருக்கணும் என்று கேட்டுக் கொண்டதெல்லாம் அண்ணாமலையின் உழைப்புக்கும் புலமைக்கும் கிடைத்த பரிசு.

இன்று இரவு சுமார் ஏழு மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு பதினாறு வருடங்களுக்கு பின் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்தது. இதுவரை இருந்த வீட்டை விட்டுவிட்டு சற்று பெரிய வீட்டுக்கு அவர் குடிபெயர்ந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் இப்படியொரு அதிர்ச்சி.