Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கொலை மிரட்டல்களையும் மீறி தொடங்கியது அனிதா எம்.பி.பி.எஸ்

நீட் தேர்வால் தனது உயிரை விட்ட அனிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி இருக்கிறது.

தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனிதா. இவர் 2017ம் ஆண்டு நடைபெற்ற ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவர் ஆக வேண்டும் என்பது அனிதாவின் கனவு. அதற்கு எமனாக வந்தது நீட் என்னும் மாநில அளவிலான தகுதி தேர்வு. 2017ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. அத்தேர்வில் போதுமான மதிப்பெண்ணை அனிதாவால் எடுக்க முடியவில்லை. தனது லட்சியத்திற்கு நீதிமன்ற கதவுகளையும் பலமாக தட்டினார். ஆனால், எங்கும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை. இனி மருத்துவக் கல்வி படிப்பது சாத்தியமாகவில்லை என்ற கவலையில் செப்டம்பர் 1ம் தேதி அனிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்நிகழ்வு ஒட்டு மொத்த தமிழகத்தையுமே அதிர்ச்சியில் உறைய செய்தது.

இதை தொடர்ந்து, அனிதாவின் வாழ்க்கை படம் கோலிவுட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை ரன்ஹோர்ஸ் நிறுவனத்துடன் ஆர்.ஜே.மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்க இருக்கிறது. அஜய் இயக்கும் இப்படத்திற்கு தீனா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது. பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற ஜூலி, இப்படத்தில் அனிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று இருக்கிறார். அந்நிகழ்ச்சியில் பொய் கூறியதற்காக கடும் எதிர்ப்பை சந்தித்த ஜூலி, அனிதாவாக நடிக்க கூடாது என எதிர்ப்புகள் கிளம்பியது. பலரும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இருந்தும், எல்லா தடைகளையும் மீறி ஜூலி நேற்று முதல் ஆளாக அனிதா உருவப்படம் பதியப்பட்ட டி சர்ட் அணிந்து பூஜையில் கலந்து கொண்டார்.

இப்படம் குறித்து இயக்குனர் அஜய் கூறுகையில், இப்படத்தில் ஜூலி நடிக்க பெரிய எதிர்ப்பு நிலவியது. ஆனால், படம் வெளிவந்த பிறகு அனைவரும் எதிர்த்ததற்கு வருத்தம் தெரிவிப்பர். வணிக வெற்றிக்கோ, புகழுக்கோ இப்படத்தை இயக்கவில்லை. திறமை இருந்தும் நம் கல்வி முறைக்கு சிறிதும் பொருந்தாத ஒரு கல்வி முறையால் கொல்லப்பட்ட அனிதாவின் இறப்புக்கு நீதி வேண்டும். இத்திரைப்படம் கண்டிப்பாக தேசிய விருது வாங்கும் என நம்புவதாக தெரிவித்து இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top