கடந்த 2008ஆம் ஆண்டு காவிரி பிரச்சனையின்போது கன்னட மக்கள் குறித்து  பேசிய சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் ‘பாகுபலி 2’ படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கன்னட அமைப்புகள் கூறி வந்த நிலையில் இன்று சத்யராஜ் இதற்காக வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை படித்தார்.

ஆனால் அதன்பின்னரும் சத்யராஜின் உருவ பொம்மையை எரித்து கன்னடர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழ்த்திரையுலகில் ஏராளமான கன்னட நடிகர்கள் இருக்கின்றார்கள் என்பதை மறக்க வேண்டாம் என்று அவர் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அன்புமணியின் முழு அறிக்கை பின்வருமாறு:

காவிரி பிரச்சினையில் கன்னடர்களை நடிகர் சத்யராஜ் தாக்கிப் பேசியதாகவும், அதைக் கண்டித்து அவர் நடித்த ‘பாகுபலி-2’ படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன. அதுமட்டுமின்றி, திரைப்படத்தின் வெளியீட்டு நாளான 28-ம் தேதி கர்நாடகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன. இது கண்டிக்கத்தக்கது.

‘பாகுபலி -2’ திரைப்படம் ஆந்திரத்தைச் சேர்ந்த இயக்குநரால் அம்மாநிலத்தை மையமாகக் கொண்ட கற்பனை கலந்த கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பலமொழி பேசும் கலைஞர்கள் நடித்துள்ளனர். இதை ஒரு பிரமாண்டமான கலைப் படைப்பாக மட்டும் தான் பார்க்க வேண்டும்; ரசிக்க வேண்டும்.

அதற்கு மாறாக, கன்னடர்களை கடுமையாக விமர்சித்த தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் சத்யராஜ் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

அதனால் அந்தப் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்பதும், அதற்காக முழு அடைப்பு போராட்டம் நடத்துவோம் என மிரட்டுவதும் சகிப்பற்ற, குறுகிய மனப்பான்மை கொண்ட, வெறுப்பு அரசியலின் அடையாளங்களாகும்.

காவிரிப் பிரச்சினைக்கான போராட்டம் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற போது, அதில் நடிகர் சத்யராஜ் கன்னடர்களை இழிவுபடுத்தியோ, தரக்குறைவாகவோ பேசவில்லை.

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு உள்ள நியாயங்களைத்தான் எடுத்துக் கூறினார். இதை சத்யராஜின் கருத்தாக பார்க்கக் கூடாது. ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாகத் தான் பார்க்க வேண்டும்.

காவிரி பிரச்சினை குறித்து ஒரு நடிகர் கூறிய கருத்துகளை அவர் நடித்த திரைப்படங்களுடன் இணைத்துப் பார்த்து சர்ச்சைகளை எழுப்புவது முறையல்ல. 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு சத்யராஜ் நடித்த சுமார் 30 திரைப்படங்கள் கர்நாடகத்தில் வெளியாகியுள்ளன.

பாகுபலி -1′ திரைப்படத்தில் கூட நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். அத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு கர்நாடகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அவ்வாறு இருக்கும் போது சத்யராஜ் காவிரி பிரச்சினைக்காக குரல் கொடுத்ததைக் காரணம் காட்டி அவருக்கும், அவர் நடித்த திரைப்படத்திற்கும் சிக்கல் ஏற்படுத்துவது நல்லதல்ல.

இது கெட்ட நோக்கம் கொண்ட அரசியலாகும். தமிழ் திரையுலகில் கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகர்களும், கலைஞர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்கள் பல நேரங்களில் சொந்த மாநில உணர்வுடன் கர்நாடகாவுக்கு ஆதரவாகவும்,

தமிழகத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர். சத்யராஜ் விவகாரத்தில் கன்னட அமைப்புகள் கடைபிடிக்கும் அதே அணுகுமுறையை தமிழகமும் கடைபிடித்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.