தெலுங்கு பட உலகில் 1970 முதல் 2007 வரை அதிக படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வந்த சிரஞ்சீவி புதிய கட்சி தொடங்கி அரசியலில் குதித்தார். பின்னர் கட்சியை கலைத்து விட்டு காங்கிரசில் இணைந்து மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தார். அரசியல் பிரவேசத்தால் 10 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் தமிழில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை ‘கைதி எண் 150’ என்ற பெயரில் தெலுங்கில் தயாரித்து அந்த படத்தில் கதாநாயகனாகவும் நடித்து மீண்டும் திரையுலகுக்கு வந்து இருக்கிறார்.

திரையரங்குகளில் ரசிகர்கள் நிரம்பி வழிய பலத்த எதிர்பார்ப்போடு நேற்று இந்த படம் திரைக்கு வந்தது. பெங்களூருவில் ஒரு தியேட்டரில் முதல் காட்சிக்கான 3 டிக்கெட்டுகளை ஏலம் போட்டனர். அந்த டிக்கெட்டுகளை சிரஞ்சீவியின் தீவிர ரசிகர் ஒருவர் ரூ.36 லட்சத்துக்கு வாங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த தொகையை சமூக சேவை பணிக்காக தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்போவதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

மீண்டும் நடிக்க வந்தது குறித்து சிரஞ்சீவி அளித்த பேட்டி வருமாறு:-

“அரசியலுக்கு வந்த பிறகு வயது முதிர்ச்சியால் இனிமேல் சினிமா நமக்கு சரிபட்டு வராது என்று கருதி அதை விட்டு விலகி இருந்தேன். ஆனால் ரஜினிகாந்தும், அமிதாப்பச்சனும் மீண்டும் நான் நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள். அமிதாப்பச்சன், ‘அரசியலில் எனக்கு நடிக்க தெரியாததால் திரும்பவும் சினிமாவுக்கே வந்து விட்டேன் நீங்களும் வந்து விடுங்கள்’ என்றார்.

அவர்கள் இருவரின் வற்புறுத்தல் காரணமாக தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தை தெலுங்கில் தயாரித்து நடிக்க முடிவு எடுத்தேன். அந்த படத்தின் தெலுங்கு உரிமை எனக்கு கிடைக்க விஜய் உதவி செய்தார். ரஜினிகாந்த் என்னிடம், ‘உங்களுக்கு ரசிகர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி உங்களை திரையில் பார்க்க விரும்புகிறார்களோ அதுபோன்று காட்ட திறமையான டைரக்டரை தேர்வு செய்து நடியுங்கள்’ என்றார்.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆலோசனைகளை ஏற்று நடித்து படமும் இப்போது திரைக்கு வந்துவிட்டது. எனது மனைவிக்கு மீண்டும் நான் நடிக்க வந்ததில் சந்தோஷம். ஆந்திரா இரண்டாக பிரிந்தபோது மந்திரி பதவியில் இருந்த நான் அதை தடுக்கவில்லை என்று ஆத்திரப்பட்டு பலர் எனது வீட்டின் முன்னால் புடவைகள், வளையல், பூ போன்றவற்றை வைத்துச்சென்றார்கள். அதைப் பார்த்து மனைவியும் குடும்பத்தினரும் வருத்தப்பட்டனர். சினிமாவுக்கு வந்த பிறகு அதுபோன்ற கவலைகள் எதுவும் இனிமேல் இல்லை.”

இவ்வாறு சிரஞ்சீவி கூறினார்.