மிரட்டலுக்கு நடுவே உருவான அமீர் படம்! ஷுட்டிங் எடுக்காமலே தெருவில் சுற்றிய டீம்!

குருவை மிஞ்சிய சிஷ்யன் ஆகிவிட்டார் சசிகுமார். சுப்ரமணியபுரம் படத்தை பார்த்துவிட்டு அமீரும் கூட அப்படிதான் எண்ணியிருப்பார். “என்கிட்ட வேலை செஞ்ச சசி, போகும்போது ‘சுப்ரமணியபுரம்’ கதையை சொல்லி ஒப்பீனியன் கேட்டுட்டுதான் போனான். ஆனால் முத்து கோபால் அப்படியில்ல. திடீர்னு படம் பண்றேன் சார்னு சொல்லி ஆசி வாங்கிட்டு போயிட்டான். 70 சதவீத படத்தை முடிச்சுட்டு திரும்பி வந்து, சார்… மிச்ச படத்தை எடுக்க காசு இல்ல. அது மட்டுமில்ல. நீங்க இந்தப்படத்துல ஒரு முக்கியமான ரோல்ல நடிக்கணும். இந்த படத்தையும் மிச்ச பணத்தை போட்டு முடிக்கணும்னு கேட்டுகிட்டான்”

“அரை நம்பிக்கையோடு படத்தை போட்டு பார்த்தேன். சசிகுமார் மாதிரியே இவனும் மிரட்டிட்டான். திருப்பூர் கோவை பகுதிகளில் பெரும் பிரச்சனையாக இருக்கும் சாயப்பட்டறை குறித்த விஷயம்தான் இந்த படத்தின் மையக்கரு. படத்தின் கருத்திற்காகவும் அதை சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் சொன்ன திரைக்கதை ஸ்டைலிலும் ஈர்க்கப்பட்டு இந்த படத்தை நானே முடிச்சு கொடுத்ததோடு நடிக்கவும் செஞ்சுருக்கேன்” என்றார் டைரக்டர் அமீர்.

திருப்பூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கும் போது நடத்த விடாமல் ஆயிரம் தொந்தரவுகளாம். ஏராளமான மிரட்டல்களாம். இரண்டு மாதங்கள் ஷுட்டிங்கே நடத்தாமல் அந்த பகுதிகளில் வெறுமையாய் சுற்றி வந்திருக்கிறார் முத்து கோபால். எப்படியோ பல்வேறு இன்னல்களுக்கு நடுவில் படம் முடிந்தது.

அதற்கப்புறம் படத்திற்கு பொருத்தமாக அமீரே ஒரு தலைப்பு வைத்தார். அதுதான் அச்சமில்லை அச்சமில்லை. பாலசந்தர் இயக்கி வெற்றியை குவித்த படமாச்சே அது? அமீரே பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமியிடம் பேசி இந்த தலைப்பை வாங்கியிருக்கிறார். விரைவில் படம் திரைக்கு வரும்போது, திருப்பூர் கோவை பகுதிகளில் ஒரு எழுச்சி வந்தால், அதற்கு முழு பொறுப்பும் பாராட்டும் முத்து கோபாலுக்கு மட்டுமல்ல… அடையாளம் கண்டு அங்கீகரித்த அமீருக்கும் போய் சேரட்டும்…

Comments

comments

More Cinema News: