Tamil Cinema News | சினிமா செய்திகள்
வரி ஏய்ப்பு விவகாரம்… கைதாகிறாரா அமலா பால்?

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை அமலா பால், புதுச்சேரி மாநிலத்தில் போலியான ஆவணங்கள் மூலம் சொகுசுக் காரைப் பதிவு செய்ததாகப் புகார் எழுந்தது. கேரளாவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி சுரேஷ் கோபி மற்றும் நடிகர் பஹத் பாசில் மீதும் இந்த புகார் எழுந்தது.
சிந்து சமவெளி படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அமலா பாலுக்கு, மைனா படம் மூலம் திருப்பு முனையைக் கொடுத்தார் இயக்குநர் பிரபு சாலமன். அதன்பின்னர் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த அமலா பால், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை அந்தஸ்தைப் பெற்றார். பிஸியாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே இவர் நடித்த தலைவா படத்தை இயக்கிய ஏ.எ.விஜயைத் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. திருமணமாகி ஓராண்டுக்குப் பின்னர் இந்த ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது. இப்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.
இந்தநிலையில், அமலா பால் சொகுசுக் கார் ஒன்றை புதுச்சேரியில் பதிவு செய்திருந்தார். கேரளாவில் சொகுசுக் கார்களுக்கு அதிகமான வரி செலுத்த வேண்டும். இதைத் தவிர்க்கும் வகையில், போலியான முகவரிச் சான்று கொடுத்து புதுச்சேரியில் வாகனத்தைப் பதிவு செய்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த புதுச்சேரி குற்றப்பிரிவு போலீசார், விசாரணையை முடுக்கி விட்டனர். தான் போலியான முகவரிச் சான்று கொடுக்கவில்லை என்றும், புதுச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், ஷூட்டிங் நாட்களில் அங்கு தங்கிக் கொள்வதாகவும் அமலா பால் விளக்கம் கொடுத்திருந்தார்.
அமலா பால் கொடுத்திருந்த குறிப்பிட்ட முகவரிக்குச் சென்று போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கட்டிடம் 3 மாடிகள் கொண்ட அபார்ட்மெண்ட் என்பது தெரியவந்தது. அந்த கட்டிடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், நடிகை அமலா பாலுக்கு வாடகைக்கு எந்த வீட்டையும் கொடுக்கவில்லை என அந்த கட்டிடத்தின் உரிமையாளர் மறுப்புத் தெரிவித்திருந்தார். மேலும், அந்த முகவரியைக் கொண்டு மேலும் பலர் வாகனங்கள் பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கிரைம் பிராஞ்ச் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய புதுச்சேரி போலீஸார் தயாராகி வருகின்றனர். இம்மாத இறுதிக்குள் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டால் நீதிமன்றத்தில் அமலா பால் ஆஜராக வேண்டும் அல்லது கைது நடவடிக்கையை அவர் எதிர்க்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். சுரேஷ் கோபிக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்கிறார்கள்.
