News | செய்திகள்
நான் விஜய் சேதுபதியின் பெரிய ரசிகை – ப்ரேமம் நடிகை பேட்டி
விஜய் சேதுபதி என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது, தன்னை தானே முதலீடாக வைத்து வெற்றிகள் பெறுபவர் என்பதுதான். மேலும், நிஜ வாழ்கையில் அவரின் எதார்த்தமும், பண்பும் அவருடன் பணிப்புரிந்த இயக்குனர்களையும், நடிகைகளையும் மறுமுறை பணிபுரிய தூண்டுகிறது என்பதை அவரின் திரைப்படங்களில் மூலமாக காணலாம்.
இதையே, நடிகர் சித்தார்த், நடிகை ரம்யா நம்பீசன் உட்பட பலர் கூறி வந்தனர். அதன் நீட்சியாக இப்போது வந்துள்ளார் மடோனா செபாஸ்டியன். பிரேமம் படத்தில் நடித்த இவர், ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் தேர்வான அனுபவம் பற்றி கேட்ட போது, மடோன்னா “பிரேமம் படத்தின் ஒலி வடிவமைப்பாளர் எனக்கு நல்ல நண்பர், அவரின் அறிமுகத்தினாலே நலன் குமாரசாமி இயக்கும் இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது. எனது கதாபாத்திரத்திற்கு ஒத்திகை பார்த்த பின்னரே என்னை தேர்வு செய்தனர். நலன் போன்ற நல்ல இயக்குனரின் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்தபடத்திற்கு தேர்வான உடனே, இது ஒரு சிறந்த படம் என உணர்ந்தேன்”.
“விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு நான் ஒரு பெரிய ரசிகை. அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களின் இயல்பை புரிந்து கொள்ளும் திறன் அவருக்கு அதிகம் உள்ளது. காதலும் கடந்து போகும் படப்பிடிப்பின் போது அவர் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார்” என்றார் மடோன்னா.
மேலும், பிரேமம் படத்திற்காக தமிழ் ரசிகர்கள் என் மீது காட்டிய அன்பு வியக்கத்தக்கதாக இருந்தது. எந்த ஒரு சினிமா பின்னணியில் இருந்தும் வராத நான், நல்ல மலையாளம், ஹாலிவுட் படங்களை பார்த்து வளர்ந்தேன். ரசிகர்களின் மனங்களில் நிற்கும் கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க எனக்கு விருப்பம் என மடோன்னா கூறியுள்ளார்.
