சினிமா பிரபலங்கள் தங்கள் பெர்சனல் பக்கங்கள் குறித்து அதிகம் பேசுவதில்லை. அதுகுறித்து வதந்திகள் சூறாவளியாகச் சுழன்றடித்தாலும், அதை அசால்டாகக் கடந்து செல்லும் பிரபலங்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அதிலும், குறிப்பாக நடிகைகள் தங்களின் காதல் குறித்தோ, எதிர்கால கணவர்கள் குறித்தோ பொதுவெளியில் வாய்திறக்கக் கூடாது என சத்தியமே செய்திருப்பார்கள் போலும். இதில், கோலிவுட், பாலிவுட் என எந்தத் திரையுலகமும் விதிவிலக்கல்ல. அப்படித்தான், தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவுடனான காதல் குறித்து கடைசி வரை சோனம் கபூர் வாய் திறக்கவே இல்லை.

alia-ranbir
alia-ranbir

வெளிநாடுகளில் இருவரும் ஜோடியாகச் சுற்றுவது குறித்து புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலானாலும், அதுகுறித்து சோனம் மௌனமே காத்து வந்தார். ஆனால், அந்த வதந்திகளை மெய்ப்பிக்கும் விதமாக ஆனந்த் அஹுஜாவையே, சோனம் கபூர் திருமணம் செய்துகொண்டார். மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் நேற்று காலை திருமணமும், மாலையில் லீலாவதி ஹோட்டலில் ரிசப்ஷனையும் நடத்தி முடித்தாகி விட்டது. சோனம் கபூர் – ஆனந்த் அஹுஜா திருமணத்தால் பாலிவுட் திரையுலகமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

ரிசப்ஷனுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் குடும்பத்தினருடன் வந்து மணமக்களை ஆசிர்வதித்தனர். அந்த விழாவில் மணமக்களுக்கு அடுத்தபடியாக பார்வையாளர்களைக் கவர்ந்தது ரன்பீர்க் கபூர் – ஆலியா பட் ஜோடி. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கடந்த பல மாதங்களாகவே பாலிவுட் திரையுலகினர் மட்டுமல்லாமல், ஊடகத்தின் ஒரு பகுதியினரும் சத்தியம் செய்யாத குறையாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால், அதுகுறித்து மற்ற நடிகர்களைப் போலவே ரன்பீர் மற்றும் ஆலியாவிடம் இருந்து மௌனமே பதிலாக வந்தது.

அதே சமயம் அது வதந்திதான் என இருவர் தரப்பிலும் எந்த மறுப்பும் வெளியாகாமலேயே இருந்து வந்தது. இந்த சூழலில்தான் நேற்று நடந்த சோனம் கபூர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக வந்து இறங்கியது எல்லோரது புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது. பொது நிகழ்ச்சி ஒன்றுக்கு ஜோடியாக வந்ததன் மூலம், தங்களது நெருக்கத்தை வெளிப்படையாக அவர்கள் அறிவித்து விட்டனர் என்று ஒரு தரப்பும், இல்லை. இல்லை. பொதுவான நட்பின் அடிப்படையிலேயே இருவரும் ஒன்றாக வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் என மற்றொரு தரப்பும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன. எது எப்படி இருந்தாலும், அடுத்த நட்சத்திரத் திருமண விழாவுக்குப் பாலிவுட் திரையுலகம் தயாராகிக் கொண்டிருப்பதாக ரசிகர்கள் கிசுகிசுக்கிறார்கள்.