tasmac

கரூர், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக, குக்கிராமத்தில் உள்ள மரத்தடியில், டாஸ்மாக் பணியாளர்கள் மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில் இயங்கிய, 93 டாஸ்மாக் கடைகளில், 61 கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த கடைகளை, அருகில் உள்ள கிராமங்களில் திறப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தேர்வு செய்யப்பட்ட, 31 இடங்களில், பொதுமக்கள் எதிர்ப்பு கிளம்பும் முன் டாஸ்மாக் கடைகளை திறக்க, அவசர, அவசரமாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த பகுதிகளில் கட்டடம் இல்லாமல், இடங்கள் மட்டுமே வாடகைக்கு கிடைத்துள்ளன. அங்கும், கட்டுமான பணிகள் மின்னல் வேகத்தில் நடக்கிறது. தற்போது, 70 சதவீத கடைகள் மூடப்பட்ட நிலையில், தினமும், 50 லட்சம் ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்
பட்டுள்ளது.எனவே, கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களுக்கு அருகில், மது விற்பனை செய்து வருகின்றனர்.
டாஸ்மாக் பணியாளர் ஒருவர் கூறியதாவது: குக்கிராமத்தில் இடம் பார்த்தால் கூட, பொதுமக்கள் எதிர்ப்பு உள்ளது. பொதுமக்கள் எதிர்ப்பு இல்லாமல், தேர்வு செய்யப்படும் இடத்தில் பாதுகாப்பு கிடையாது.
புன்னசத்திரம் அருகில், மாந்தோப்பு கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், உடனடியாக விற்பனையை துவங்க நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். எனவே, வேறு வழியின்றி மரத்தடியில், மது விற்பனையை தொடங்கி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.