தல அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்த டீசர் வெளியான மூன்று நாட்களில் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்று உலக சாதனை செய்துள்ளது. இந்த கொண்டாட்டத்தை அஜித் ரசிகர்கள் மிகப்பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள கமல்ஹாசனின் இளைய மகள் அக்சராஹாசன் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியபோது, ‘நான் நடித்த புதிய திரைப்படமான ‘விவேகம்’ படத்தின் டீசர் உலக சாதனைகளை தகர்த்துள்ளது அறிந்து பெருமிதம் கொள்கிறேன். இந்த சாதனையை செய்ய உதவிய அனைவரும் நன்றி’ என்று கூறியுள்ளார்.

அஜித்தின் முந்தைய படமான ‘வேதாளம்’ படத்தில் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடித்திருந்த நிலையில், ‘விவேகம்’ படத்தில் அவருடைய இரண்டாவது மகள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இந்த படம் அக்சராஹாசனின் முதல் தமிழ்ப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.