சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் 57-வது படமாக உருவாகிவரும் ‘விவேகம்’ படத்தின் தலைப்பு, போஸ்டர் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் இன்று வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், ‘விவேகம்’ படத்தின் டீசரை தமிழ் புத்தாண்டில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து ரம்ஜானை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. பொதுவாக அஜித் தான் நடிக்கும் படங்களை வியாழக்கிழமை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல், சிறுத்தை சிவாவும் தனது 3 படங்களையும் வியாழன் அன்றே ரிலீஸ் செய்வதை செண்டிமெண்டாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை வெள்ளிக்கிழமை வருவதால் படத்தை ஒருநாள் முன்னதாக வியாழன் அன்று ஜுன் 22-ம் தேதியே ரிலீஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஜுன் 22-ஆம் தேதி, சினிமாவில் அஜித்தின் சக போட்டியாளராக கருதப்படும் விஜய்யின் பிறந்தநாள் ஆகும். ஆகவே, அன்றைய தேதியில் படம் ரிலீஸ் ஆனால் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் பெரிய கொண்டாட்ட நாளாக அது மாறும் என்பது மட்டும் உண்மை.

இருப்பினும், இன்னும் ‘விவேகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அதுவரை அனைவரும் காத்திருக்கத்தான் வேண்டும். இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.