அஜித் பட வில்லனான விவேக் ஓபராய், ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணத்திற்கு விலையுயர்ந்த பரிசு ஒன்றை அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் லலிதா (வயது 26). கடந்த 2012-ஆம் ஆண்டு குடும்ப பகை காரணமாக இவரது உறவுக்கார இளைஞர்கள் சிலர் இவர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், லலிதாவின் முகம் முழுவதும் கருகிவிட்டது. இதையடுத்து, அவரது முகத்தில் இதுவரை 17 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது.முகம் கருகிவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துவந்த லலிதா சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி நம்பருக்கு தனது செல்போனில் இருந்து போன் செய்துள்ளார். எதிர்முனையில் ராகுல் (வயது 27) என்பவர் அந்த போனை எடுத்து பேசியுள்ளார். தவறான அழைப்பில் ஆரம்பித்த இவர்களது நட்பு பின்னர் காதலாக மாறியுள்ளது.

தனக்கு நடந்த கொடூரமான விஷயங்களை எல்லாம் லலிதா, ராகுலிடம் மனம் திறந்து கூறியுள்ளார். ராகுலும் லலிதாவின் வெளி அழகாக பார்க்காமல், அவரது நல்ல மனதை பார்த்து அவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். இந்நிலையில், இவர்களது திருமணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இவர்களின் காதலை அறிந்த இந்தி திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் அவர்களது திருமணத்திற்கு பணஉதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கும் மேலாக, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் லலிதா-ராகுல் திருமணத்தில் நேரடியாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவர்களுக்கு அடுக்குமாடி வீடு ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். இதனால், மணமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விவேக் ஓபராய் தற்போது அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தகக்து.