ajith-ak57
ajith

வேதாளம் படத்திற்கு பிறகு அஜித் நடித்து வரும் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஏகே57 என்பது தற்காலிக தலைப்பு. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார். காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், தம்பிராமய்யா, கருணாஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் நடந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடந்தது. மூன்றாம் கட்டமும், இறுதி கட்டமுமான படப்பிடிப்புகள் பல்கேரியா நாட்டில் படமாகிறது. ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான துப்பறியும் கதை இது. அஜீத் இண்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார்.

பல்கேரியாவில் காஜல் அகர்வாலுடன் இரண்டு பாடல் காட்சிகளும், கிளைமாக்ஸ் காட்சியும் படமாக இருக்கிறது. கிளைமாக்சில் காஜல் அகர்வாலும், அக்ஷரா ஹாசனும் நடிக்கிறார்கள். இதற்காக படக்குழுவைச் சேர்ந்த நடன கலைஞர்கள், சண்டை கலைஞர்கள் ஏற்கெனவே பல்கேரியா சென்று விட்டார்கள்.

அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், இயக்குனர் சிவா ஆகியோர் நாளை பல்கேரியாக புறப்பட்டுச் செல்கிறார்கள். அங்கு 55 நாட்கள் தங்கியிருந்து படத்தை முடித்துவிட்டுத் திரும்புகிறார்கள். பல்கேரியாவில் நான்கு நகரங்களில் படப்பிடிப்பு நடக்கிறது. ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் திட்டமிட்டிருக்கிறார்.