Tamil Cinema News | சினிமா செய்திகள்
தூத்துக்குடி சம்பவம் குறித்து வாய் திறக்காத தல, தளபதி… ஏமாற்றத்தில் ரசிகர்கள்
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்து பல நடிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், தல மற்றும் தளபதி இருவரும் வாய் திறக்காமல் இருப்பது அவரது ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அம்மாவட்ட மக்கள் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வந்தனர். இதை தொடர்ந்து, மே 22ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 20,000க்கும் மேற்பட்ட மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது, அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் கலவரம் ஏற்பட்டது. தொடர்ந்து, காவல்துறை நடத்திய துப்பாக்கிக்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. காவல்துறையினரின் செயலுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன், தமிழ் திரையுலகமும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பெரும்பாலான நடிகர்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.
அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ள ரஜினிகாந்தும், புதிய கட்சியை தொடங்கியுள்ள கமலும் தூத்துக்குடி சம்பவத்தை கடுமையாகவே விமர்சித்தனர். ஆனால், இவர்களுக்கு அடுத்ததாக அதிக ரசிகர்களை கொண்டுள்ள விஜயும், அஜித்தும் இதுவரை தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவில்லை. இதிலும், அஜித் எந்த நிகழ்ச்சிக்கும் ரியாக்ட் செய்யமாட்டார். இது பல நாட்களாகவே அஜித் படைக்கு கவலையாக இருந்து வருகிறது.
தற்போது இதே பாணியில், தளபதி விஜயும் கருத்துக்களை எதுவும் தெரிவிக்காமலே மவுனம் காத்து இருக்கிறார். முன்னதாக, முதல் ஆளாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜல்லிக்கட்டு பிரச்சனை என தனது கண்டனத்தை பதிவு செய்தவர் விஜய். இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் கலந்து கொண்டார். சமீபத்தில் திரையுலகம் சார்பில் நடத்தப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்திற்கான அறவழி போராட்டத்திலும் கலந்து கொண்டார். இருந்தும், ஸ்டெர்லைட் பிரச்சனையில் ஏன் மவுனம் காக்கிறார் என ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள். தல மற்றும் தளபதி கண்டனம் தெரிவித்தால், அதனை உலக அளவில் கொண்டு செல்லலாம் என அவர் காத்திருந்த ரசிகர்கள் இந்த செய்தி சற்று ஏமாற்றமாகவே இருக்கும் என தெரிகிறது.
