பல்கேரியா நாட்டில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித்குமார் ஜெயலலிதா மறைவு குறித்து அறிந்ததும் தமிழகம் திரும்பியுள்ளார்.

சிவா- அஜித் படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுடன் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு.

தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை இரவு சுமார் 11.30 மணிக்கு காலமானார் என்பதை அஜித்துக்கு தெரியப்படுத்தினார்கள். இச்செய்தி அவரை மிகவும் சோகப்படுத்தியது. கண்டிப்பாக நேரில் அஞ்சலி செலுத்தியாக வேண்டும் என்று உடனடியாக கிளம்பினார்.

ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு மாலை 6 மணிக்குள் முடிந்துவிடும் என்று தெரியப்படுத்துவதற்குள், அஜித் விமானத்தில் ஏறிவிட்டார். இதனால், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் அவர் கலந்து கொள்ள முடியவில்லை.

தமிழகம் திரும்பியிருக்கும் அஜித், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மறைவு குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.