அஜீத்தின் ‘விவேகம்’ படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. படப்பிடிப்பு நிறைவடைய இன்னும் ஒரு மாதம் கூட ஆகலாம் என்கிறது அங்கிருந்து வரும் தகவல்கள். இதற்கிடையில் விவேகம் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கடந்த ஒரு மாத காலமாக பல்கேரியாவில் டேரா போட்டிருக்கிறார்.

இத்தனைக்கும் சென்னையில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் சத்யஜோதி தியாகராஜன் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டிருந்தார். யாரிடமும் ஓட்டுக் கேட்கவில்லை. தேர்தல் நாளன்று சென்னைக்கு வரவுமில்லை. ஆனால் அவரை வெற்றி பெற செய்தார்கள் தயாரிப்பாளர்கள். இது விந்தையாக இருந்தாலும், அவ்வளவு பிடிவாதமாக அவர் ஏன் பல்கேரியாவிலேயே இருக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறதல்லவா?

அங்குதான் ஒரு இனிப்பும் கசப்பும். முதலில் இனிப்பு என்ன? இதுவரை விவேகம் பட ஸ்டில்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது எத்தனை முறை என்று கணக்குப் போட்டால், அதிகமில்லை ஜென்ட்டில்மேன்தான் விடை. ஆனால் இவர் பல்கேரியா சென்ற பின், “ரசிகர்கள் ரொம்ப ஆர்வமா இருக்காங்க. முதல்ல நல்ல ஸ்டில் ஒன்றை வெளியிடுங்க” என்று கூறியிருக்கிறார். அதற்கப்புறம் வந்ததுதான் புத்தம் புதிய ஸ்டில் ஒன்று. அவர் சென்னை திரும்புவதற்குள் மேலும் சில ஸ்டில்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆமாம்… ஏதோ கசப்பு கசப்புன்னியே… அது இன்னாப்பா?

வேறொன்றுமில்லை. படத்தின் பட்ஜெட் நினைத்ததை விட பல மடங்கு எகிறிவிட்டதாம். ஏன் இப்படி நடந்தது என்பதை அலசி ஆராய்ந்த தியாகராஜன், அதற்கான சில திட்டங்களை வகுத்துக் கொடுத்து படப்பிடிப்பை விரைவில் முடிக்க வழி செய்திருக்கிறாராம். தான் கொடுத்த திட்டம் சரிவர நடக்கிறதா என்பதை செக் பண்ணுவதற்காகதான் அவர் பல்கேரியாவிலேயே தங்கிவிட்டதாக கூறுகிறார்கள்.

எத்தனையோ வெற்றிப்படங்களை கொடுத்த தயாரிப்பாளர். போடுற திட்டம் தெளிவாதான் இருக்கும்! பூசணிக்காய் உடைச்சுட்டே வாங்க சார்…