சென்னையில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள விவேகம் பட வசூல் பாகுபலி-2வின் வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் – விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம்.

இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை – அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.இந்தப் படம் கடந்த 24-ம் தேதி வெளியானது. படத்துக்குக் கலவையான விமரிசனங்கள் வெளிவந்தாலும் வசூலில் பல சாதனைகளைப் படைத்துவருகிறது.

சென்னையில் விவேகம் படம் புதிய சாதனையொன்றை படைத்துள்ளது. இதுவரை எந்தவொரு தமிழ்ப்படமும் சென்னையில் தொடர்ந்து நான்கு நாள்களாக தலா ரூ.1 கோடி வசூலித்ததில்லை. இந்தச் சாதனையை எட்டிய முதல் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது விவேகம். முதல் நான்கு நாள்களில் தினமும் ரூ. 1 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.Baahubali

இந்நிலையில் சென்னையில் பாகுபலி 2 படத்தின் வசூலை விவேகம் தாண்டியுள்ளது. 2-வது வார இறுதி நிலவரத்துக்குப் பிறகு இத்தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி 2 படம் சென்னையில் மொத்தமாக ரூ. 8.25 கோடி வசூலித்துள்ளது. அதை 2-வது வார இறுதி வசூல் நிலவரத்தின்படி தாண்டியுள்ளது விவேகம். கடந்த ஞாயிறு வரை விவேகம் சென்னையில் ரூ. 8.60 கோடி வசூலித்துள்ளது. சென்னையில் அஜித் படம் ஒன்று ரூ. 8 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது இதுவே முதல்முறை.