ajith helping mind

அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன இயக்குனர் சுசீந்திரனின் ட்வீட் தான் கோலிவுட்டில் இன்றைய வைரல் டாக்காக மாறி இருக்கிறது. இதில், அச்சம்பவத்தை அப்போது உதவி இயக்குனராக இருந்த வில் அம்பு இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியன் தன் டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.

கோலிவுட்டில் அஜித்திற்கு ரசிகர்கள் ஏராளம். இதற்கு காரணம் அவரின் நடிப்பு மட்டுமல்ல நல்ல பண்பு தான். உதவியை கூட பிறர் தெரியாமல் மட்டுமே செய்வார். இது கோலிவுட்டுக்கும், அவரின் ரசிகர்களுக்கு நன்கறிந்த செய்தி தான். அஜித் இதை பற்றி பேசவோ, விளம்பரப்படுத்தவோ என்றுமே நினைக்க மாட்டார். சமீபத்தில், அஜித்தின் 47வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதற்கு கோலிவுட் பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இயக்குனர் சுசீந்திரன், அவரின் நண்பர் ரோஜா ரமணன் மருத்துவ சிகிச்சைக்கு அஜித் உதவினார் எனத் தெரிவித்து, பிறந்தநாள் வாழ்த்தையும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், இயக்குனர் இலக்கியன் இது சுசீந்திரன் அஜித்தின் கால்ஷீட்டிற்காக சொல்லும் பொய். இதை ரோஜா ரமணனின் ஆன்மாவே மன்னிக்காது என தெரிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வில் அம்பு இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியன், ‘எங்களது நண்பன் ரோஜா ரமணன் சிறுநீரகப் பாதிப்பால் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது, மருத்துவச் செலவிற்காக அதிகளவு பணம் தேவைப்பட்டது. உதவி இயக்குநர்கள் 30 பேர் சேர்ந்து திரைத்துறையில் உள்ளவர்களிடம் உதவி கேட்டுக் கொண்டிருந்தோம்.
இந்த நிலையில்தான் அஜித் சாரிடம் கேட்கலாம் என்று ‘வில்லன்’ பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றோம். 30 உதவி இயக்குநர்கள் சேர்ந்து ஒரு உதவி இயக்குநருக்காக உதவி கேட்டு வந்ததைப் பார்த்த அஜித் சார், எங்களை உடனடியாக சந்தித்தார். எங்களின் சார்பாக மூன்று பேரை மட்டும் அழைத்தார். நான், இலக்கியன், சுசீந்திரன் மூன்று பேரும் சென்று அவரிடம் பேசினோம். ரோஜா ரமணனின் நிலையை சொன்னோம். அவர் அடுத்து எதுவும் கேட்காமல் உடனடியாக, ‘ஆபரேஷன் பேக்கேஜ் அமௌவுண்ட் எவ்வளவு?’ என்று மட்டும் கேட்டார்.

அதற்கு நாங்கள், ‘ரோஜா ரமணனின் உடல்நிலை தேறிய பின்புதான் ஆபரேஷன் பற்றியே முடிவு செய்ய முடியும்’ என்று மருத்துவர்கள் சொன்னதைச் சொன்னோம். அதற்கு அவர் தன் மேனேஜர் ராஜாவை மருத்துவமனைக்கு அனுப்பி பணம் கொடுக்கச் சொன்னார். மேனேஜர் ராஜா தானே மருத்துவமனைக்கு வந்து, மருத்துவமனையின் பெயரிலேயே 20 ஆயிரம் ரூபாய்க்கு செக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

ஒருவேளை ரோஜா ரமணனின் உடல்நிலை ஆபரேஷன் செய்துகொள்ளும் அளவிற்கு இருந்திருந்தால், ஆபரேஷனுக்காக முழுத்தொகையையும் அவரே தரும் எண்ணத்தில் தான் ‘ஆபரேஷன் பேக்கேஜ் அமவுண்ட் எவ்வளவு?’ என்று கேட்டார். இறுதியில் ரோஜா ரமணனை எவ்வளவு முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. இது நடந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், உண்மையில் அஜித் சாருக்கு இதெல்லாம் நியாபகம் இருக்குமா என்றுகூடத் தெரியவில்லை’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த டுவீட்டால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என தெரியவில்லை. காரணம் கண்டிப்பாக அஜித் உண்மை சொல்ல மாட்டார். சொல்ல விரும்பவும் மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.