தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே ஜல்லிக்கட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் தங்களது கலாச்சாரம், பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள். அந்நிய சக்திகள் நம் கலாச்சாரத்தை சீரழிப்பதா என்று சமூக வலைத்தளங்களில் கடும் விவாதம், கருத்துப் பரிமாற்றம் போய்க் கொண்டிருக்கிறது.

சில நாட்கள் முன் வரை இந்த விவகாரம் பற்றி ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் எதுவும் சொல்லாமல் இருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விழாவில் ஜல்லிக்கட்டுக்கான தன்னுடைய ஆதரவை ரஜினிகாந்த் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால், தமிழ்த் திரையுலகின் இரண்டு முக்கிய வசூல் நடிகர்களான விஜய், அஜித் இருவரும் இதுவரை தங்களது நிலை என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டு மக்களின் கஷ்ட, நஷ்டங்களில், உணர்வுகளில் விஜய், அஜித் இருவரும் பங்கெடுத்துக் கொள்ள மாட்டார்களா என நடுநிலை ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். தங்கள் படங்கள் வெளிவரும் போது இருவரது ரசிகர்களும் ஒருவர் மாற்றி மற்றொருவர் தரக் குறைவாகத் திட்டிக் கொண்டு சமூக வலைத்தளங்களில் செய்துவரை, உணர்வுபூர்வமான ஜல்லிக்கட்டு விவகாரத்தில் செய்யலாமே என்கிறார்கள்.

அஜித்தும், விஜய்யும் ஆதரவுக் குரல் கொடுத்தால் அவர்களது ரசிகர்களும் இன்னமும் தீவிரமாக இதில் இறங்குவார்களே என்றும் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். இன்னமும் காலம் தாழ்த்தாமல் அவர்கள் தங்களது நிலை என்ன என்பதை சொன்னால்தான் தமிழ்நாட்டு மக்களின் மனதில் அவர்கள் தொடர்ந்து இடம் பிடிக்க முடியும்.