Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்து சூப்பர் ஸ்டாரை குறி வைக்கும் ஐஸ்வர்யா தனுஷ்..
ஐஸ்வர்யா தனுஷ் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராஜசேகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர். அப்படத்தில் கணவர் தனுஷையே இயக்கி இருந்தார். படத்தின் வெளியீட்டிற்கு முன்னர் பல வரவேற்புகள் நிலவியது. வொய் திஸ் கொலவெறி பாடல் சர்வதேச அளவில் சக்சஸை பெற்றது. இருந்தும், 3 படம் வெளியீட்டிற்கு பிறகு சரியான வரவேற்பை பெறவில்லை.
இதை தொடர்ந்து, ஐஸ்வர்யா கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். ப்ரியா ஆனந்த், விவேக், டாப்சி மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். பொதுவாகவே பெண் இயக்குநர்கள் படம் என்றால் அதில் பொழுதுபோக்கு அம்சங்கள் சோபிக்காமல் போய்விடும். குறிப்பாக ஒருவித பெண்மைத் தனமே மேலோங்கி இருக்கும். ஆனால் முதல் முறையாக ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும் அளவுக்கு ஒரு தரமான பொழுதுபோக்குப் படத்தைத் தந்திருந்தார் ஐஸ்வர்யா தனுஷ். காஸினோ எனப்படும் சூதாட்ட உலக நிகழ்வுகளை பேசி இருக்கும் இப்படம் உண்மையாகவே கோலிவுட்டிற்கு புதிய களமாக அமைந்தது.
இதை தொடர்ந்து, சினிமா உலகின் வெளிச்சப்படாமல் இருக்கும் ஸ்டண்ட் கலைஞர்களுக்காக ஒரு ஆவணப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பின்னணி பேசி இருந்தார். தொடர்ந்து, பாராலிம்பிக் தங்க மகன் மாரியப்பனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது. இருந்தும், அடுத்தக்கட்ட அப்படம் வெளியிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதை தொடர்ந்து, ஐஸ்வர்யா அடுத்து இயக்க இருக்கும் படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராஜசேகர் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
