தேவையற்ற தகராறுகளால் விமானப் பயணங்கள் தாமதமானால் 5 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

அண்மையில் விமானப் பயணங்களில் பயணிகளுடன் ஏற்படும் தகராறுகளால் விமானப் பயணங்கள் தாமதமாவதைத் தடுக்க ஏர் இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது. சமீபத்தில் சிவசேனா எம்.பி ரவிந்திர கெயிக்வாட், ஏர் இந்தியா ஊழியரைத் தாக்கிய சம்பவம் நிகழ்ந்தது. மேலும், திரிணாமுல் எம்.பி டோலா சென்னும் சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து அபராத நடவடிக்கையை அறிவித்துள்ளது ஏர் இந்தியா.

முக்கிய பிரமுகர்கள் முதல் அடிப்படை பயணிகள் வரை, விமானத் தாமதத்துக்கு யார் வழி செய்தாலும் அபராதம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது ஏர் இந்தியா நிறுவனம். அதன்படி, ஒரு மணி நேரம் விமானம் தாமதமானால் 5 லட்சம் ரூபாய் அபராதமும், 2 மணி நேரம் தாமதமானால் 10 லட்சம் அபராதமும், 2 மணி நேரத்துக்கு மேலான தாமதத்துக்கு 15 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.