தனது ஆஸ்தான இயக்குனருடன் மீண்டும் இணைகிறார் தளபதி

தளபதி விஜய் அடுத்து உருவாக இருக்கும் புது படத்தை இயக்குனர் பேரரசு இயக்க இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சிம்மாசனத்தை உருவாக்கி வைத்து இருப்பவர் நடிகர் விஜய். அவர் நடிப்புக்கும், நடனத்துக்கும் இங்கு ரசிகர்கள் ஏராளம். சமீபகாலமாக அவர் நடிப்பில் உருவாகி வரும் எல்லா படங்களும் சமூக பிரச்சனையை பேசுவதாகவே அமைந்து இருக்கிறது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். சர்கார் எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இப்படம் சமகால அரசியல் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமார் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து, விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தை இயக்குனர் பேரரசு இயக்குவார் என கோலிவுட்டில் கிசுகிசுக்கள் கிளம்பி இருக்கிறது. சர்கார் படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் இருப்பதால், விஜய் தனது அடுத்த படத்தை முடிவு செய்யும் பணிகளில் பிஸியாக இருக்கிறார். அவர் தனக்கு இரண்டு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பேரரசுவை அழைத்து தனக்கென ஒரு கதையை தயார் செய்யுமாறு கூறி இருப்பதாக அவரின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கிறது.

முன்னதாக, விஜய் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் சிவகாசி, திருப்பாச்சி என இரு படங்களில் நடித்து இருக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் இரு படங்களுமே உருவாக்கப்பட்டு இருந்தது. திருப்பாச்சியில் தங்கை உறவையும், சிவகாசி படத்தில் அம்மா பாசத்தை அழகாக பேரரசு சொல்லியதில் படத்திற்கு செம வரவேற்பு கிடைத்தது. பாக்ஸ் ஆபீஸில் பட வசூல் சக்கை போடு போட்டது. இதை தொடர்ந்து, இவர்கள் இணையும் இப்படமும் பெரும் வரவேற்பை பெரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.