Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் ட்விட்டரில் அதகளப்படுத்தும் ப்ரேமம் ரசிகர்கள்!

மலையாள மக்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அள்ளிக்கொண்ட ப்ரேமம் படத்தினை ரசிகர்கள் மீண்டும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மலையாள திரையுலகிற்கும் தமிழ் ரசிகர்களுக்கும் என்றுமே பிரிக்க முடியாத பந்தம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு வருடமும் மலையாள படமோ, மங்கைகளோ தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடிப்பதை வாடிக்கையாக்கி கொண்டுள்ளனர். ஜிமிக்கி கம்மல் ஷெரில், ப்ரியா வாரியர் உட்பட எல்லாருமே மலையாள குயில்கள் என்றாலும் தமிழ் ரசிகர்கள் அவர்களுக்கு ஆர்மி தொடங்கும் அளவுக்கு இங்கு தான் செம வைரலாக இருக்கிறார்கள். ஆனால், இதற்கெல்லாம் விதை போட்டது என்னவோ ஒரே படம் தான். ஆம் ப்ரேமம்.
எப்போது மலையாள படம் தமிழ் ரசிகர்களால் விரும்பப்பட்டாலும் அனைவரையும் சென்று சேர்வது இல்லை. ஆனால் எல்லா தரப்பினராலும் விரும்பப்பட்ட படம் ப்ரேமம் மட்டுமே. கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு திரையரங்கிலும் 200 நாட்களை கடந்து சாதனை செய்தது. ஒரு படத்தை இந்தளவு சிலாகிச்சு உரிமை கொண்டாடி சண்டை போட்டு நம் மக்கள் மூச்சையும் ஆவியையும் தொலைத்தது வேறெந்தப் படத்துக்கும் இல்லை என்பதே உண்மை. அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்திருந்தார்.
சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன், அனுபமா ப்ரமேஸ்வரன் ஆகிய மூன்று நாயகிகளுடன் படம் வெளிவந்தது. மூன்று நாயகிகளுடன் நிவின் பாலிக்கு ஏற்பட்ட காதலே படத்தின் பின்னணியாக அமைந்து இருந்தது. பிரேமத்தில் காட்டப்பட்ட முக்காதல்களில் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்பட்டது ‘மலர்-ஜோர்ஜ்’ காதலே. ஒவ்வொருத்தரும் தங்களின் பாத்திரத்தை கச்சிதமாக செய்திருந்தனர். எத்தனை ஹிட் படங்கள் வெவ்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டாலும் ப்ரேமத்தின் ஒரிஜினல் வெர்சன் டச்சை தர முடியாது மட்டுமே நிதர்சனம். தமிழ் பெண் சாய் பல்லவி இன்று பலருக்கு மலையாள மலர் டீச்சராகவே மனதில் சிம்மாசனம் போட்டு விட்டார்.
இத்தனை ஆண்டுகள் கழித்து ஒரு படம் ரசிகர்களுக்கு இத்துணை மகிழ்ச்சியை தருகிறது என்றால் கண்டிப்பாக அப்படம் கிளாசிக் படம் தானே. அந்த வகையில், ப்ரேமம் இன்று தனது மூன்றாவது வருட கொண்டாட்டத்தில் இருக்கிறது. இதை நிவின் பாலி படத்தின் போஸ்டருடன் வெளியிட்டு இருக்கிறார். அவரின் ட்விட் தான் இன்றைய இணையத்தின் வைரல் டாக்காகி இருக்கிறது.
