Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் வரும் தமிழ் படம் 2.. யார் மாட்ட போகிறார்களோ கலக்கத்தில் கோலிவுட்

சமகால படங்களை கரிசனமே இல்லாமல் கலாய்த்து வரும் தமிழ் படம் 2வின் அடுத்த கட்ட அப்டேட்டை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. பெரும்பாலும் கதைகளுக்கு முக்கியம் கொடுத்தே கோலிவுட்டில் தற்போதைய ஹிட் படங்கள் உருவாகி வருகிறது. ஆனால், வெறும் காமெடியை வைத்து கொண்டு படம் எடுக்கவே ஒரு தில் தேவைப்படுகிறது. அதிலும் வெற்றி கண்டால் நிஜமாவே அப்படத்தில் ரசிகர்களுக்கான விஷயம் ஏதோ இருக்கிறது தானே. அப்படி ஒரு படம் தான் தமிழ் படம்.
2010ம் ஆண்டு வெளியான இப்படத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் சமகால தமிழ்த் திரைப்படங்களை கிண்டல் செய்து உருவாக்கப்பட்டு இருந்தது. இத்திரைப்படத்தை சி. எஸ். அமுதன் இயக்கியிருந்தார். திஷா பாண்டே கதாநாயகியாக நடித்திருந்தார். வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, எம். எஸ். பாஸ்கர், சண்முகசுந்தரம், பரவை முனியம்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படத்தின் இண்ட்ரோ பாடல் முதல் கிளைமேக்ஸ் வரை இயக்குனர் பல படங்களை கலாய்த்து இருந்தார். படத்திற்கு வரவேற்பு இருந்தது போல வசூலும் சக்கை போடு போட்டது.
இதை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்டாக கருதப்படுவது வெற்றி படங்களின் அடுத்த பாகம் தான். அந்த லிஸ்டில் தற்போது தமிழ் படமும் இணைந்து இருக்கிறது. தமிழ் படம் 2.0 என்ற பெயரை சமீபத்தில் தான் தமிழ் படம் என மாற்றி படக்குழு அறிவித்து இருக்கிறது. சி.எஸ்.அமுதனே இயக்கும் இப்படத்தில் மிர்ச்சி சிவா மீண்டும் நாயகனாக நடிக்கிறார். காமெடி நடிகர் சதீஷ் முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் ஹிட் அடித்தது. சமீபத்தில் வெளியான டீசர் தமிழகத்தின் சமீபத்திய வைரல் கண்டண்ட் முதல் ஹிட் படங்கள் வரை கலாய்த்து அட்ராசிட்டி செய்து வைரல் பட்டியலில் இடம்பிடித்தது. படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டும் ஏதேனும் ஒரு புதிய படத்தின் ஹிட் காட்சியின் ட்ரோல் போஸ்டரும் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இண்ட்ரோ சாங் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன் 17வது போஸ்டரை (நாங்க சொல்லப்பா இயக்குனர் சொன்னது) படக்குழு இன்று வெளியிட்டு இருக்கிறது. அப்பதிவில், நான் யாருமில்லா எனத் தொடங்கும் அகில உலக சூப்பர்ஸ்டாரின் அறிமுக பாடல் முழு வீடியோவும் நாளை மாலை 5 மணிக்கு இணையத்தில் வெளியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, இதே அறிவிப்புக்காக படக்குழு டிக் டிக் டிக் படத்தை கலாய்த்தது குறிப்பிடத்தக்கது.
