‘சரவணன் இருக்க பயமேன்’ படம் ஹிட் என்கிறார்கள் அப்படக்குழுவினர். (கணக்கெல்லாம் கேட்டுகிட்டு இருக்க முடியுமா? ஒத்துக்குறோம் ஐயாமாருங்களே…) இதை தடபுடலாக கொண்டாடிவிடுவது என்று முடிவெடுத்துவிட்டார் உதயநிதி. இதை படத்தின் இயக்குனர் எழிலிடம் சொல்ல, அவருக்கு கூச்சமோ கூச்சம். (இருக்காதா பின்னே?)

“நான் இதுவரைக்கும் பல படங்கள் இயக்கியிருக்கேன். ஆனால் எந்தப்படத்துக்கும் சக்சஸ் மீட் வச்சதில்ல. ஆனால் உதயநிதிதான் வற்புறுத்தி இப்படியொரு சக்சஸ் மீட் வச்சார்” என்றார் எழில்.

ரெண்டே ரெண்டு வார்த்தை மைக்கை பிடித்து பேசுவதற்காக எங்கிருந்தோ பிளைட் பிடித்தெல்லாம் வந்திருந்தார் நாயகி ரெஜினா. இவரும் உதயநிதியும் பர்பாமென்ஸ் கொடுத்த ‘எம்புட்டு இருக்குது ஆச…’ பாடல் யு ட்யூபில் 20 லட்சம் ரசிகர்களால் பார்க்கப்பட்ட தகவலை சொல்லி பரவசப்பட்டது ச.இ.ப.ஏ குழு.

கடைசியாக பேசிய உதயநிதி, வெற்றி தோல்வி குறித்து பெரிதாக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. “நான் இதுவரைக்கும் நடிச்ச எல்லா படங்களும் ஓரளவுக்கு சரியான படங்கள்தான்னு நினைக்கிறேன். ‘ஒரு படம் பி.அண்டு சி வரைக்கும் போய் ரீச் ஆகுற மாதிரி பண்ணுங்க சார்’னு என்னோட டிஸ்ட்ரிடிபியூட்டர்ஸ் கேட்டுகிட்டே இருந்தாங்க. அதுக்காக பண்ணியதுதான் இந்தப்படம். மறுபடியும் எப்ப கால்ஷீட்டுன்னு எழில் சார் கேட்க ஆரம்பிச்சுட்டார். பொறுங்க சார். நடுவுல ரெண்டு படம் பண்ணிட்டு வந்துடுறேன்” என்றார்!

என்னது… மறுபடியுமா?