Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் புது ஹீரோயினுக்கு வாய்ப்புக் கொடுக்கும் விஜய் ஆண்டனி..
மீண்டும் புது ஹீரோயினுக்கு வாய்ப்புக் கொடுக்கும் விஜய் ஆண்டனி:
மிஸ் இந்தியா பட்டம் வென்றவர்லீலை இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கும் கொலைகாரன் படத்தில் நாயகியாக புதுமுகம் ஆஷிமாவுக்கு நாயகியாக வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, நாயகனாக நான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, தற்போது அவருக்கு தமிழ் சினிமாவில் பல வாய்ப்புகள் நாயகனாக குவிந்து வருகின்றன. பெரும்பாலும் விஜய் ஆண்டனியின் படக்கதையை விட அதன் பெயர்களே சுவாரசியமாக இருக்கும்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான காளி படத்துக்குப் போதிய வரவேற்புக் கிடைக்கவில்லை. கிருத்திகா உதயநிதி இயக்கிய அந்த படம் தயாரிப்பாளர் கையைச் சுடும் அளவுக்கு நஷ்டமடையவில்லை என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். காளி படத்துக்குப் பின்னர் பல்வேறு படங்களில் நடிக்க விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் கணேசா இயக்கத்தில் திமிரு புடிச்சவன் படத்தில் விரைப்பான போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். அப்படத்தில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக இணைந்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் ஒரு படமும், `திருடன்’ என்ற படத்திலும் நடிக்க உள்ளார். மேலும் இயக்குநர் மற்றும் நடிகரான எஸ்.வி. சந்திரசேகர் நடித்துள்ள ‘டிராபிக் ராமசாமி’ படத்திலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
காளி படத்துக்குப் பின்னர் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கொலைகாரன் படத்தில் நடிக்கிறார். தியா மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க `ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் ஒப்பந்தமாகி இருக்கிறார். விஜய் ஆண்டனி, அர்ஜுன் இரண்டு பேரில் வில்லன் யார்? என்பது தான் படத்தின் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒன்லைன்னே படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விஷாலுக்கு வில்லனாக இவர் சமீபத்தில் நடித்த இரும்புத்திரை படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில், இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், கொலைகாரன் படத்தில் நாயகியாக ஆஸ்திரேலியவாழ் இந்தியப் பெண்ணான ஆஷிமா என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்திருக்கும் ஆஷிமாவுக்கு தமிழில் இதுவே முதல் படம். தனது பெரும்பாலான படங்களில் புதுமுக ஹீரோயினுக்கு வாய்ப்பு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள விஜய் ஆண்டனி, இந்த படத்தில் ஆஷிமாவுக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார் என்கிறார்கள். மேலும், ஏற்கனவே உள்ள ஹீரோயின்களை அணுகினால், தனக்கு ஜோடியாக நடிக்க அவர்கள் மறுப்புத் தெரிவிக்கலாம். எனவேதான், அந்த தர்மசங்கடத்தைத் தவிர்க்கவே விஜய் ஆண்டனி புதுமுக ஹீரோயின்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார் என்று சொல்பவர்களும் உண்டு.
ஹரியானாவைச் சேர்ந்த ஆஷிமா, 12ம் வகுப்பு முடிந்தவுடன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகியுள்ளார். அங்கு மருத்துவம் படித்திருந்தாலும் தனக்கு நடிப்பின் மீதுதான் ஆர்வம் என்று சொல்லும் ஆஷிமா, நடனம், பாட்டு மற்றும் நடிப்பு ஆகியவற்றை முறையாகப் பயின்றுள்ளதாகச் சொல்கிறார். தெலுங்கில் நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பாட்ட ஜெஸ்ஸி படம்தான் இவரது முதல்படம். அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை என்றாலும், கேன்ஸ் திரைப்பட விழா வரை அந்த படம் சென்று வந்துள்ளது. இதனால் டோலிவுட்டில் கவனம் பெற்ற ஆஷிமா, அறிமுக இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஆஷிஷ் காந்திக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இதுதவிர மேலும் 2 தெலுங்குப் படங்களில் நடிக்கவும் ஆஷிமா ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆஷிமாவுக்கு, கொலைகாரன் படத்தின் ஹீரோயின் வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது. தமிழில் நடிக்கும் முதல் படம் என்றாலும், விஜய் ஆண்டனியின் தெலுங்கு ரீமேக் படங்கள் மூலம் அவரைத் தெரியுமாம் ஆஷிமாவுக்கு. அதேபோல், ரஜினி, விஜய் படங்களைப் பார்த்திருப்பதாகக் கூறும் ஆஷிமா, மிஸ் இந்தியா குளோபல் (2015) மற்றும் மிஸ் சிட்னி உள்ளிட்ட அழகிப் பட்டங்களையும் வென்றவராம். வார்ம் வெல்கம் ஆஷிமா!