விடிவி2விற்கு பிறகு கௌதம் இயக்க இருக்கும் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம். ஆச்சரியத்தில் ரசிகர்கள்

விடிவி2விற்கு பிறகு கௌதம் இயக்க இருக்கும் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இயக்குனர் கௌதம் மேனன் விண்ணை தாண்டி வருவாயா படத்தை தொடர்ந்து தனது மற்றொரு வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர்களில் இடம் பிடித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்குநர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்து, மின்சார கனவு படத்தில் பணியாற்றினார். மாதவனை வைத்து மின்னலை படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் பதித்தார். அப்படம் அவருக்கு சரியான வரவேற்பை பெற்று தந்தது. தன்னுடைய வெற்றி படங்களை பாலிவுட்டில் இயக்கி வருவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். கௌதம் மேனனின் பெரும்பாலான படங்களில் நாயகனும், நாயகியும் காதல் வலியுடன் பிரிந்து விடுவார். படம் ரசிகர்களிடம் ஆகாஓஹோ என பேசப்படும்.

இதை தொடர்ந்து, கௌதம் தற்போது தன்னுடைய வெற்றி படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்து இருக்கிறார். அதன்படி, துருவநட்சத்திரம் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை முடித்து கொண்டு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார். முதலில் மாதவன் நாயகனாக நடிக்க இருந்த இப்படத்தில் சமீபத்தில் சிம்புவே நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. புனித் ராஜ்குமார், டோவினோ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள். கௌதம் தனது சொந்த நிறுவனமான ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மூலம் படத்தை தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தை முடித்ததும் சூர்யாவின் காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இப்படம் இன்னும் முதற்கட்ட பணிகளில் தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சூர்யா நடிப்பாரா என்றும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இவ்விரண்டு படங்களை முடித்த பிறகே என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் படத்தின் கதையை விவாதிக்க இருப்பதாக கௌதம் மேனன் கூறியுள்ளார். கண்டிப்பாக அப்படத்தில் அஜித் நடிக்க வைக்க படக்குழு படு தீவிரமாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.