தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருக்கும் மகேஷ் பாபுவின் மெழுகு சிலை மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட இருக்கிறது.

உலகளவில் புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்களுக்கு லண்டனில் அமைந்துள்ள மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்படுவது வழக்கமாகி இருக்கிறது. சிலை அளவில் இல்லாமல் முழுக்க ஒரு உயிர் உருவமாகவே அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரான ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சச்சின் டெண்டுல்கர், சல்மான் கான், சாருக்கான், ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப் உள்ளிட்ட பிரபலங்களின் மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, தென்னிந்தியாவில் பாகுபலி படத்தின் நாயகன் பிரபாஸ், கட்டப்பாவாக கலக்கிய நம்மூர் சத்யராஜ் ஆகியோருக்கு மெழுகு சிலை வைக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிற்கு மெழுகு சிலை அமைக்கப்பட இருக்கிறது. அதற்கான, உடல் அளவுகள், அடையாளங்கள் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மகேஷ் பாபு தனது டுவிட்டரில் செம ஹாப்பியாக டுவீட் தட்டி இருக்கிறார். அப்பதிவில், மதிப்புமிக்க மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் இடம்பெற இருப்பதில் சூப்பர் ஹேப்பி. தகவல்களில் விழிப்புடன் இருந்த குழுவிற்கு நன்றிகள் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக, தெலுங்கு பட உலகிற்கே பிரம்மாண்டம் சேர்த்த பிரபாஸ் மெழுகு சிலை 2017 ஆம் ஆண்டு பாங்காக்கில் இருக்கும் துஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் பாகுபலி ரூபத்தில் அமைக்கப்பட்டு விட்டது. தென்னிந்திய நடிகர்களில் மெழுகு சிலை அமைக்கப்பட்டது பிரபாஸுக்கு தான். அதை தொடர்ந்து, அப்படத்தில் முக்கிய வேடமேற்ற பிரபலம் சத்யராஜுக்கும் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்த அடுத்தக்கட்ட தகவல்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.