Raghava Lawrence-Jallikkattu

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர் நான் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன் என்று லாரன்ஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சாய்ரமணி இயக்கத்தில் லாரன்ஸ், நிக்கி கல்ரானி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. பெயருக்கு முன்னாள் மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் இடம்பெற்றிருந்தால், கடும் சர்ச்சையில் சிக்கினார் லாரன்ஸ்.

மேலும், படமும் விமர்சன ரீதியாக கடும் பின்னடைவை சந்தித்தது. ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தைப் பார்த்த ரஜினி, படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், லாரன்ஸ் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது “எனது இதயத்திலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் இவை. இதுபோன்றதொரு வலியை இதுவரை நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டதில்லை. ஆனால், இப்போது அதை பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர் நான் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். இதுபோன்ற பிரச்சினைகளை யார் கிளப்பி விடுகிறார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். இப்படியான பிரச்சினைகளால் நான் அச்சப்பட்டுவிட மாட்டேன். எது நேர்ந்தாலும் அதை எதிர்கொள்வேன்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் நான் தனியாக தவித்துவந்த காலத்தில் சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயனும் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் தான் நான் சினிமாவில் அடியெடுத்து வைக்க உதவினார்கள்.

இப்போதும்கூட ’மொட்ட சிவா கெட்ட சிவா’ வெளியீட்டுக்கு பின்னர் ரஜினிகாந்த் தான் என்னை ஒரு குழந்தைபோல் ஆரத்தழுவி நிபந்தனையற்ற அன்பும் ஆதரவும் தெரிவித்திருக்கிறார். என்னை அவர் நன்கு அறிவார். நானும் அவரை அறிவேன். அவர் எனது குரு.

எனக்கு நிறைய அனுபவங்களையும் படிப்பினைகளையும் கொடுத்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

’மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை வெற்றிப் படமாக்கிய எனது நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு பிரச்சினைகளுக்கும் பள்ளிக்கூட பரீட்சைகளுக்கும் இடையே இப்படத்தை வெற்றிப்படமாக ஆக்கியமைக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தைத் தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துள்ள ‘சிவலிங்கா’ ஏப்ரல் 14ம் தேதி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.