Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனுக்காக 17 வருடம் கழித்து மீண்டும் சினிமாத்துறைக்கு வந்த பிரபல நடிகை

சிவகார்த்திகேயன் படத்துக்காக 17 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வருகிறார் முன்னணி நடியாக வலம் வந்த ஒருவர்.
மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன், இன்றைய சூழலில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார். அதற்கேற்றார்போல், நடிப்பு, நடனம், சண்டைக் காட்சிகள் என ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கான அத்தனை தகுதிகளுடனும் ஒவ்வொரு படத்துக்கும் தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார் சிவா. சின்னத்திரையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய தனது பழைய நாட்களையும் மறக்காமல் அசைபோடும் பழக்கம் கொண்ட சிவகார்த்திகேயன், இப்போ ரொம்ப பிஸியான ஹீரோ.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தனது கிராஃபை உயர்த்திய இயக்குநர் பொன்ராமுடன் நல்ல நட்பில் இருக்கும் சிவகார்த்திகேயன், அவரது இயக்கத்திலேயே ரஜினி முருகன் படத்தில் நடித்தார். கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி என பெரிய நட்சத்திரப் பட்டாளங்களோடு களமிறங்கிய பொன்ராம், அந்த படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய மார்க்கெட் உண்டு என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். அடுத்தடுத்த படங்களில் பிஸியான சிவா, நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து வேலைக்காரனாக ஜொலித்தார். மோகன் ராஜா இயக்கிய அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க, சிவகார்த்திகேயன் மார்க்கெட் கடகடவென உயர்ந்தது.
சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் உருவாகி வரும் சீமராஜா படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. இது தவிர, ஸ்டூடியோ க்ரீன் – ராஜேஸ் எம் கூட்டணியில் ஒரு படம், இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ் பிக்ஷன் படம் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
முதன்முறையாக ரவிக்குமார் – சிவகார்த்திகேயன் இணையும் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். 24 ஏ.எம். நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த படத்துக்கு விஞ்ஞானி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பூஜை இன்று போடப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் உறுதி செய்யப்படாத நிலையில், இஷா கோபிகர் நடிப்பது இறுதி செய்யப்பட்டு விட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2001ம் ஆண்டு வெளியான நரசிம்மா படத்துக்குப் பின்னர் எந்த தமிழ் படங்களிலும் நடிக்காத இஷா, சிவகார்த்திகேயன் படத்துக்கு ஓகே சொல்லியிருக்கிறார். இந்த படத்தின் மூலம், கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தமிழ் திரையுலகில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
