செம்மலை (அதிமுக அமைப்புச் செயலாளர்)

ஓ.பன்னீர்செல்வம் இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை. அவர் இதை ஏன் செயற்குழுவில் தெரிவிக்கவில்லை. எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவை வரவேற்றுவிட்டு தற்போது மாற்றி கூறியுள்ளார். 2001-ல் அதிமுக அமைச்சரவையில், நான் 5-வது இடத்திலும், ஓபிஎஸ் 13-வது இடத்திலும் இருந்தோம். அப்போது இக்கட்டான சூழலில் ஜெயலலிதா, ஓபிஎஸ்ஸை முதல்வராக்கினார். இது தொடர்பாக எங்களை அழைத்து சமாதானம் செய்தார். ஜூனியரான ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். முதல்வராக சசிகலா தமிழகத்துக்கு சிறப்பான எதிர்காலத்தை தருவார்.

ஓ.எஸ்.மணியன் (தமிழக அமைச்சர்)

ஓபிஎஸ் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். சட்டப்பேரவையில் ஆட்சியின் மீது திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தவறான கருத்துகளை பதிவு செய்தார். அதை தட்டிக்கேட்க ஓபிஎஸ்ஸுக்கு மனம் வரவில்லை.மறுப்பும் தெரிவிக்காமல் இருந்தார். மொத்தத்தில் அவர் திமுகவுக்கு விலைபோய்விட்டார்.

துரைக்கண்ணு (தமிழக அமைச்சர்)

ஓபிஎஸ் கட்சியை காட்டிக் கொடுத்துவிட்டார்.

தங்க தமிழ்ச்செல்வன் (எம்எல்ஏ)

அதிமுக எம்எல்ஏக்களின் பெரும்பான்மையுடன் சசிகலா ஓரிரு நாளில் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அதை யாரும் தடுக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வம் திமுகவினால் இயக்கப்படுகிறார்.

தமிழிசை சவுந்தரராஜன் (தமிழக பாஜக தலைவர்)

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்க கவர்னருக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. குழப்பமான சூழ்நிலையில் கவர்னர் வந்து என்ன செய்ய முடியும்? கவர்னர் தமிழ்நாட்டுக்கு வந்துதான் சூழ்நிலையை கவனிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் எங்கிருந்தாலும் நிலைமையை சரியாக கணிக்க முடியும். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னால் பாஜக இருப்பதாகக் கூறுவதை நான் வன்மையாக மறுக்கிறேன். இன்றைக்கு அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினையை, மறைக்க மற்றவர்கள் மீது பழி போடுகின்றனர்.

திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்)

சசிகலாவுக்கு எதிராகவும், அமைச்சர்களுக்கு எதிராகவும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிடும் தகவல்கள் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். எந்தவித குமுறலும் இன்றி முதல்வராக சசிகலாவை ஓ.பன்னீர்செல்வமே முன்மொழிந்தார். இப்போது அவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

நாஞ்சில் சம்பத் (அதிமுக செய்தி தொடர்பாளர்)

பன்னீர்செல்வம் திமுகவின் சதிக்கு பலியாகி விட்டார். அவரது பின்னணியில் திமுக இருப்பதாக சசிகலா கூறியது உண்மையாகிவிட்டது. சமீபத்தில் நடத்த சட்டப்பேரவை கூட்டத்திலும் பன்னீர்செல்வத்தை மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் ஆதரித்து பேசினர். அதை பன்னீர்செல்வம் சிரித்தபடியே ஏற்றுக் கொண்டார். மேலும், அவர் செயல்பட முடியாத முதல்வராக இருக்கிறார் என ஸ்டாலின் கூறும்போதும் அவர் மவுனமாகத்தான் இருந்தார்.