தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பின் அடுத்தக்கட்ட நகர்வாக, இன்று மாலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, அதிமுக எம்பி.,க்கள் சந்திக்கின்றனர்.

அதிமுக.,வுக்குள் ஏற்பட்டுள்ள மோதலால், ஆட்சி நிர்வாகத்தைக் கைப்பற்றும் சசிகலா அணியினரின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதால், அடுத்து என்ன செய்வது என, சசிகலா உள்பட அதிமுக மூத்த தலைவர்களும் வெறுங்கையை பிசைந்து வருகின்றனர்.

மேலும், சசிகலா முதல்வர் பதவி ஏற்பதற்கு ஒத்துழைக்காமல், ஆளுநர் வித்யாசாகர் ராவ் தொடர்ந்து டெல்லி அல்லது மும்பையிலேயே முகாமிட்டுள்ளார். இதுவும், அவர்களை விரக்தி அடையச் செய்துள்ளது.

இதனால், டெல்லி சென்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து, இதுபற்றி முறையிட, அதிமுக மேலிடம் முடிவு செய்தது. இதன்படி, அதிமுக எம்பி.,க்கள் டெல்லி சென்றுள்ளனர். தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால், இன்று மாலை அவர்கள், தம்பிதுரை தலைமையில் குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவர் அனுமதி அளிக்கும்பட்சத்தில் அவரை சந்தித்து, தமிழக அரசியலின் உண்மை விவரம், அதிமுக.,வின் தற்போதைய நிலை, சசிகலாவின் செயல்பாடுகள் போன்றவை பற்றி விரிவாக பேசுவோம் என, அதிமுக எம்பி.,க்கள் குறிப்பிட்டுள்ளனர்.