அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 131 அதிமுக எம்.எல்.ஏக்களும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 3 பேரும் பங்கேற்றனர்.

சசிகலா மீது ஓபிஎஸ் பரபரப்பாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பின்னர் நடைபெற்ற கூட்டம் என்பதால் அதிக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசிய சசிகலா, நம்மை பிரித்தாளும் சக்தி யாருக்கும் இல்லை என்று கூறினார்.

ஜெயலலிதாவின் சக்தி நம்முடன் இருப்பதால் எந்த சக்தியும் நம்மை அசைத்து பார்க்க முடியாது என்று கூறிய அவர் அதிமுக ஒரே குடும்பமாக உள்ளது என்றும் கூறினார். அதிமுகவின் ஒற்றுமையை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது. அதிமுக எம்எல்ஏக்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கவில்லை என்று கூறிய சசிகலா, ஜெயலலிதா காட்டிய வழியில் அனைவரும் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

கூட்டத்தில் 131 எம்எல்ஏக்கள் சசிகலாவிற்கு ஆதரவாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும், எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை என்று இதன் மூலம் நிருபிக்கப்பட்டு விட்டதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்எல்ஏக்கள் அனைவரும் குடியரசுத்தலைவரை நேரில் சந்திக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் தாமதம் செய்வதாக குடியரசுத் தலைவரை சந்தித்து புகார் அளிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.