அதிமுகவினர் போன்ற ஒரு கோமாளிகளை பார்த்ததில்லை என தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேமுதிக சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த், அதிமுகவை மிகக்கடுமையாக விமர்சனம் செய்தார்.
“சர்.சி.வி. ராமன், அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள் பிறந்த பூமியில், தமிழகத்தின் மானத்தை கப்பலேற்றுவதற்கு அவதாரம் எடுத்துள்ளதை போல அதிமுகவினர் சில செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவினரை போன்ற ஒரு கோமாளிகளை எங்கும் பார்க்க முடியாது.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. அப்போது வெள்ள நீரை அகற்ற ஜே.சி.பி வாகனத்தை பயன்படுத்தினார்கள். எப்படி ஜே.சி.பி வாகனம் மூலம் தண்ணீரை அகற்ற முடியும்? அந்த அளவுக்கு அதிமுகவினருக்கு சிந்தனை இருக்கிறது.

அடுத்து கச்சா எண்ணெய் கடலில் கலந்த சம்பவம். நானும் கேப்டனும் கூட நேரில் சென்று பார்த்தோம். வெளிநாடுகளில் இது போல நடந்தால், பெரிய பெரிய கப்பல்கள் மூலமாக நீரை உறிஞ்சி கச்சா எண்ணெயை எடுக்கிறார்கள். ஆனால் நம்மூரில் வாளியை வைத்து அள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

கடல் தண்ணீரை வாளியில் அள்ளினால், என்றைக்கு முடிப்பது? இவை எல்லாவற்றையும் விட நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோலை பயன்படுத்தி இருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு . இதற்கு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு வேறு.

இந்த செய்தியை சீனாவின் செய்தித்தாளில் தலையங்கமாக போட்டிருக்கிறார்கள். இது போன்ற கோமாளிகள் கையில்தான் மீண்டும் ஆட்சியை கொடுக்கப் போகிறீர்களா? “ என அந்த கூட்டத்தில் அதிமுக அமைச்சர்களை பிரேமலதா விஜயகாந்த் வெளுத்து வாங்கியுள்ளார்.