fbpx
Connect with us

Cinemapettai

சசிகலா பதவிக்கு வர துப்பாக்கி முனையில் கையெழுத்து? உண்மை வெளியே வந்தது? வீடியோ

News | செய்திகள்

சசிகலா பதவிக்கு வர துப்பாக்கி முனையில் கையெழுத்து? உண்மை வெளியே வந்தது? வீடியோ

சென்னை எழும்பூர் தொகுதி அ.தி.மு.க செயலாளராக இருப்பவர் த.மகிழன்பன்.  2011-16-ம் ஆண்டு வரையில் சென்னை மாநகராட்சி நிதி குழு தலைவர் பொறுப்பு வகித்தவர். அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்திருந்தார்.

“சசிகலா மீது ஏன் இத்தனை கோபம் ?” என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவரிடம் முன் வைத்தோம்.

“ஆர்.எம்.வீரப்பன் என்கிற மதிக்கத்தக்க மனிதர் புரட்சித் தலைவருடன் 40 ஆண்டுகள் ஒன்றாக இருந்தார், அவருக்கு மேனேஜராக இருந்தார். ஆனால், அவர் முதல்வர் பதவியைக் கேட்கவில்லையே. தலைவருடன் பாதுகாவலர்களாக அதே 40 ஆண்டுகள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், குண்டுமணி, ஜஸ்டின் போன்ற ஜாம்பவான்கள் இருந்தனர். இவர்களைப் போல ஆயிரக்கணக்கான உதவியாளர்கள் ஆண்டுக்கணக்கில் தலைவருடன் இருந்தனர். தலைவரின் உதவியாளர்கள் அனைவருமே, ‘நாம் வெறும் உதவியாளர்கள்தான், தலைவர் விரும்பினால், உயர்த்தப்படுவோம்’ என்பதை நன்கு அறிந்திருந்தனர்.

தலைவர்தான் ஜெயலலிதா அம்மாவுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கொடுத்தார். கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக்கினார், கையில் செங்கோல் கொடுத்து, ‘எனக்குப் பின் நீங்கள்தான்’ என்று சூசகமாக உணர்த்தினார். புரட்சித்தலைவர் மறைவுக்குப் பின்னர் நாங்கள் அம்மாவை ஏற்றுக் கொள்ள இந்தப் பின்னணியே வலுவான காரணமாக அமைந்தது. சசிகலாவை அப்படி நாங்கள் ஏற்கும்படி, எந்த வலுவான காரணத்தையும், அம்மா சொல்லவில்லை.அம்மாவின் அப்போலோ வாசம் நல்ல முடிவாக அமையவில்லை. 75 நாட்களும் அம்மா குறித்து எந்தத் தகவலும் வெளிவராமல் ரகசியம் காத்தது சசிகலாதான். ‘அம்மா மருத்துவ சிகிச்சையில் இருக்கும் தோற்றத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை’ என்று செய்தியைப் பரப்பினார்கள். புரட்சித் தலைவரும் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர்தான். தலைவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவர் படங்கள் வெளியாகவில்லையா என்ன?

ஆனந்தராஜ் போன்ற ஒரு சில  நடிகர்கள், இந்தக் கும்பலை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பும் கேள்விக் குறிதான். உதவியாளராக மட்டுமே இருந்த சசிகலா, பொதுக்குழு உறுப்பினர்களின் வாக்களிப்பு இன்றி கழகப் பொதுச் செயலாளராக தன்னை அறிவித்துக் கொண்டது  சட்டப்படி மாபெரும் தவறு. முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது சட்டப்படியும், மனசாட்சிப்படியும் அதை விட  பெருந்தவறு. கட்சியின் ‘பை-லா ‘படி சசிகலா பொதுச் செயலாளராகவே முடியாது. கட்சியின்  பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இல்லாமல் ஒன்றுமே நடக்க வாய்ப்பில்லை.

சசிகலாவும், நடராஜனும் சட்டம் குறித்த அச்சமே இல்லாமல் ஒரு புதிய உலகத்தில் பயணம் போய்க் கொண்டிருக்கிறார்கள். அம்மா காலத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் எப்படி நடக்கும் என்பதையாவது இவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டாமா?  கழக நிரந்தரப் பொதுச்செயலாளர் என்று அம்மா (ஜெயலலிதா) தன்னை அறிவித்துக் கொண்டாலும், பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை கட்சி ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆரில் முறைப்படி அறிவிப்பார்.

‘பொதுச்செயலாளர் தேர்தல் நடக்கவிருக்கிறது, போட்டியிட விரும்புவோர், தங்கள் விபரங்களைக் கொடுக்கலாம்’ என்று அந்த  அறிவிப்பில் சொல்ல பட்டிருக்கும். சசிகலா அதை ஏன் செய்ய வில்லை? அப்படிச் செய்தால் பொதுக்குழு உறுப்பினர்கள் அத்தனை பேரும் தீபா அம்மா வீட்டுக்குத்தான் போயிருப்பார்கள். கட்சிக்குப் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய அவர்கள் தி.நகருக்குத்தானே போகமுடியும். தீபா அம்மா அனைத்தும் அறிந்தவர். ஜர்னலிசம் படித்திருக்கிறார், பண்பாகப் பேசுகிறார், மொழியறிவும் இருக்கிறது. வீட்டைத் தேடிப்போய் நிற்கிற தொண்டர்களுக்கு ஆறுதல் சொல்லவும் ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று  தைரியம் கொடுக்கவும் அம்மாவைப் போலவே நம்பிக்கை தருவது தீபா அம்மா மட்டும்தான். அம்மா வாழ்ந்த அந்த புண்ணியத்தலம், போயஸ்கார்டனுக்கு தீபா அம்மாவைக் கொண்டுபோக நாங்கள் காத்திருக்கிறோம்.

சசிகலா தரப்பு செய்துள்ள அத்தனை குளறுபடிகளையும், விதி மீறல்களையும் விளக்கமாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். துப்பாக்கி முனையில் என்னை காரில் கடத்திதான் பொதுக்குழுவில் கையெழுத்தே வாங்கினார்கள்… என்னைப் போல எத்தனை பேரோ? வடசென்னை தெற்கு  மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் நா.பாலகங்காவே என்னை போனில் அழைத்து, ‘கொஞ்சம் வருகிறீர்களா?’ என்று கூப்பிட்டார். மாவட்டச் செயலாளர் கூப்பிடுகிறாரே என்று நம்பிப் போன என்னைத் துப்பாக்கி முனையில் காரில் ஏற்றி பொதுக்குழுவுக்குக் கொண்டு போனார்கள். வெற்றுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்கினார்கள். அவர்களின் அவசரத்தில் அன்று ஒரு தவறு செய்தனர்.

‘பொதுக்குழு உறுப்பினராகிய த.மகிழன்பன் ஆகிய நான் சசிகலாவை பொதுச் செயலாளராக கொண்டு வரும் படிவத்தில் கையெழுத்திடுகிறேன்’ என்று சொல்லிதான் கையெழுத்தே வாங்கியிருக்கவேண்டும். பதவியை அடையும் வேகம், ஆத்திரம் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது. கடத்திப்போய் படிவத்தில் கையெழுத்து வாங்கத் தெரியாத கைநாட்டுகளிடம்தான் இப்போது கழகம் சிக்கிக் கொண்டிருக்கிறது. என்னைப் போலவே பலர்  பொதுக்குழுவில் கையெழுத்து போட கட்டாயப் படுத்தப் பட்டோம். ஆனால் யாரிடமும் அங்கே படிவத்தில் கையெழுத்து வாங்கவில்லை. படிவம் என்றால் என்னவென்றே தெரியாத ஆட்கள்தான் இப்போது அங்கிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் கட்சியை இவர்கள் எப்படிக் காப்பாற்றமுடியும் ? நல்ல விலைக்கு விற்காமல் இருந்தாலே போதும்” என்றார்.

பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறார் மகிழன்பன் !

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top