ஜெயலலிதா என்ற இரும்பு பெண் மணி இருந்தபோதே திமுகவை வெல்ல சிரத்தை எடுத்தே வந்தார். இப்போது அந்த இடம் காலியாகிவிட்டது.

பன்னீருக்கு குறிப்பிட்ட அளவு ஆதரவு இருந்தாலும், கட்சி சசிகலா பக்கம் சென்று விட்டது.

இந்த இரண்டு அணிகள் இணைந்தாலும் கூட திமுகவை வீழ்த்த முடியாது. பிரிந்திருந்தால், 3வதாக ஒரு கட்சி இரண்டாவது இடத்தை பிடித்துவிட்டால், அதிமுக சாம்ராஜ்யம் அஸ்தமித்து விடும்.

இதனை உணர்ந்து அதிமுக மூத்த தலைவர்கள் இரண்டு அணிகளையும் இணைக்க பாடுபட்டு வருகிறார்களாம்.

தினகரன் குடும்பத்தை அகற்றினால் மட்டுமே இது சாத்தியம் என கருதுகிறார்களாம். தினகரன் குடும்பம் பா.ஜ.க.வை விரோதியாக பார்ப்பதால், பா.ஜ.க. இந்த இரண்டு அணிகளையும் இயக்குகிறதாம்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்து, குறிப்பிட்ட அளவு தொகுதிகளை பெற்று தமிழகத்தில் காலூன்றுவது தான் பிளானாம்.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து, பின்னர் அந்த கட்சியை மூன்றாவது இடத்திற்கு தள்ளி, பா.ஜ.க இரண்டாவது இடத்தை பிடித்தது போல் இங்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாம்.

ஆனால் கர்நாடகாவில் பெற்ற வெற்றியை போல் தமிழகத்தில் பா.ஜ.க.வால் ஒருபோதும் காலூன்ற முடியாது என்றும் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தால், அதிமுகவிற்கு அதிக அளவில் இருக்கும் கிறிஸ்தவ வாக்கு வங்கியையும், குறிப்பிட்ட அளவு இஸ்லாமிய வாக்குகளையும், திராவிட கொள்கை கொண்டவர்களின் வாக்குகளையும் இழந்து அதிமுக சுருங்கி விடும் என்றும் சில அதிமுக தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்களாம்.

இதனால் அதிமுக மூத்த தலைவர்கள் இடையே இரண்டு அணிகளிலும் குழப்பான சூழல் நிலவுகிறதாம்.