Urvasi-300 Malayalam Film-5 Awards-1

தமிழ்ப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, மலையாளப் படங்களிலும் ஊர்வசி நடித்தார். மொத்தம் 300-க்கும் மேற்பட்ட மலையாளப்படங்களில் நடித்தார்.

5 முறை ‘சிறந்த நடிகை’க்கான விருது கிடைத்தது.

திரை உலக அனுபவம் பற்றி அவர் தொடர்ந்து கூறியதாவது:-

நடிகர் திலகம் சிவாஜி, இளைய திலகம் பிரபு ஆகியோருடன் ‘எழுதாத சட்டங்கள்’ படத்தில் நடித்தேன். கே.சங்கர் இயக்கிய படம்.

சங்கர் மூத்த இயக்குனர். அனைவரையும் மரியாதையுடன் நடத்தும் பெரிய மனிதர். தேங்காய் சீனிவாசனும் இதில் நடித்தார். அவர் எப்போதும் கலகலவென்று பேசிக்கொண்டே இருப்பார். படப்பிடிப்பில் அவர் தினமும் வினாடி வினா கேட்பார். அதற்காகவே ஏதாவது படித்துக்கொண்டு செல்வேன்.

பிரபுவுடன் நான் நடித்த 3-வது படம் ‘அடுத்தாத்து ஆல்பர்ட்.’ ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய படம். இவர் ‘மீண்டும் கோகிலா’ படத்தை இயக்கியவர்.

அடுத்தடுத்து இருக்கும் இரு குடும்பங்கள். அவர்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். பக்கத்து வீட்டு நட்பு வளரும்.

எங்களுக்குள் காதல் வந்தபின் குடும்பம் பகையாகும். எதிரிகளாக மாறிவிட்ட அவர்களை நாங்கள் ஒன்று சேர்ந்து திருத்துகிற கதை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது. குன்னூரில் படப்பிடிப்பு நடந்தது.

ஸ்ரீதேவி, ஜெயப்ரதா நடித்த ‘தோபா’ என்கிற இந்திப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஸ்ரீதேவியை இந்தியில் பெரிய நட்சத்திரமாக்கிய படம். இப்படம் தமிழில் ‘தெய்வப்பிறவி’ என்ற பெயரில் உருவானது.

பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். இந்தியில் ஸ்ரீதேவி ஏற்ற வேடத்தை, தமிழில் நான் ஏற்று நடித்தேன். மோகன்தான் கதாநாயகன். இன்னொரு பாத்திரத்தில் ராதிகா நடித்தார். ‘கல்யாணப்பரிசு’ போன்ற கதை.

தயாரிப்பாளர் ராமாநாயுடுவின் சொந்த ஊரான `காரம் சேய்டு’ என்கிற ஊர் அருகே சுற்றிலும் நீர் நடுவில் தீவு இருக்கும். அங்கு சென்று படப்பிடிப்பு நடத்தினார்கள். காலை 4 மணிக்கு புறப்பட்டால்தான் 7 மணிக்கு சேரமுடியும்.

Urvasi-300 Malayalam Film-5 Awards-2

இந்தப் படத்தில் நடித்தபோது ராதிகா அக்காவைச் சந்தித்தேன். சினிமாத்தனம் இல்லாமல் பேசிப் பழகினார். இருவரும் ஒரே அறையில்தான் தங்கியிருந்தோம். என்னை தன் தங்கையைப் போல பார்த்துக்கொண்டார். காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வார். என்னையும் சில பயிற்சிகள் செய்யச் சொல்வார்.

கலைஞர் அவர்கள் வசனம் எழுதிய ‘பாசமழை’ படத்தில் நான் நடித்தது அரியதொரு அனுபவம். சிவாஜி, எம்.ஜி.ஆர். போன்ற சாதனையாளர்களுக்கு வசனம் எழுதிய அவரது பேனா, நான் நடித்த படத்துக்கும் எழுதியிருப்பது என் பாக்யம் அல்லாமல் வேறென்ன?

‘பாசமழை’ படத்திலும் மோகன்தான் கதாநாயகனாக நடித்தார். குழந்தையைப் பெற்றவள்தான் தாய். பாதுகாத்து வளர்க்கிறவளுக்கு தாய்க்கான இடம் கிடைக்காது. பெற்ற பாசமா, வளர்த்த பாசமா எது வெற்றி பெறும்? என்று கேள்வி கேட்டு பதில் சொல்லும் கதை. ராதிகாவின்  குழந்தையை நான் வளர்ப்பேன். எங்களுக்குள் நடக்கும் போராட்டம்தான் கதை. இந்தப் படத்தில் கலைஞர் `குடிகேடி’ என்று ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பார். இது மாதிரி பழைய அர்த்தமுள்ள வார்த்தைகளை அவர் மட்டுமே எழுதுவார் என்றார்கள்.

1984-85 காலக்கட்டத்தில் தமிழ், தெலுங்கு இடையிடையே கன்னடம் என்று நடித்து வந்த நான், 1986-ல் மலையாள மொழிப்பக்கம் சென்று விட்டேன். தொடர்ந்து பல படங்களில் நடித்தேன்.

ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று எந்திரம் போல மாறி மாறி படப்பிடிப்புகளில் கலந்து கொண்டேன். யோசிக்கவே நேரமில்லை. காலம் என்னை அழைத்துச் சென்ற போக்கில் போய்க்கொண்டே இருந்தேன். எந்தப்படம் முதலில் வந்தது, எது பிறகு வந்தது என்று காலவரிசை சொல்ல முடியாதபடி தொடர் ஓட்டமாக ஓடிக்கொண்டிருந்தேன். 1986 முதல் 1995 வரை 10 ஆண்டுகள் மலையாளத்தில் நிலைத்து நின்றேன். இடையில் சில தமிழ்ப்படங்களுக்கு வந்து போனேன்.

நான் சினிமாவை சாதாரண தொழிலாக நினைத்துக் கொண்டிருந்தேன். அது மிகவும் நேர்த்தியான கலாபூர்வமான தொழில் என்பது மலையாளப் படங்களில் நடித்தபோது உணர்ந்தேன். அங்கு சில படங்களில் நடித்த அனுபவமே எனக்கு சினிமா மீது தீவிரமான பற்றையும் காதலையும் ஏற்படுத்தியது. கடைசிவரை நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆசையையும் ஏற்படுத்தியது.

மலையாளத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தேன்.

வெறும் வணிக ரீதியான படங்கள் என்பதிலிருந்து மாறி தரமான படங்கள், நல்ல கதையம்சம் உள்ள படங்கள், சவாலான வேடங்கள் கொண்ட படங்கள் என்று பலதரப்பட்ட வாய்ப்புகள் அங்கு கிடைத்தன. ஒரு காலத்தில், நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்காக யோசித்து யோசித்து தமிழில் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஊர்வசிக்காகவும், அத்தகைய கதாபாத்திரங்கள் மலையாளத்தில் உருவாக்கப்பட்டன.

நான் மலையாளத்தில் எல்லாக் கதாநாயகர்களுடனும் நடித்து விட்டேன். கேரள மாநில சிறந்த நடிகை விருது 5 முறை எனக்குக் கிடைத்தது. தேசிய விருதும் மலையாளப் படத்தின் மூலமாகவே கிடைத்தது.

மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, ஜெயராம், ஜெகதி ஸ்ரீகுமார், திலகன், நெடுமுடிவேணு, சீனிவாசன் போன்ற அனைத்து பெரிய கலைஞர்களுடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு மலையாளப் படங்கள் மூலமே கிடைத்தது.

ஐ.வி.சசி என்கிற மாபெரும் இயக்குனரின் இயக்கத்தில் மட்டும் 15 படங்களில் நடித்துள்ளேன். பரதன், பத்மராஜன், ஜோஷி, சத்யன் அத்திக்காடு, சிபிமலயில், ஷாஜி கைலாஷ், விஸ்வாம்பரன், வேணு நாகவள்ளி, ஹரிஹரன், பாலச்சந்திரமேனன், விஜித்தம்பி, பிரியதர்ஷன் போன்ற பெரிய இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து இருக்கிறேன்.

ஜெயராம் ஜோடியாக மட்டும் 15 படங்கள் நடித்துள்ளேன். நான் கதாசிரியையானது, தயாரிப்பாளரானது எல்லாமே மலையாளத்தில்தான் நடந்தது.

நான் நடித்தவை எல்லாமே தேர்ந்தெடுத்து நடித்தவைதான். நடித்த ஒவ்வொன்றும் எனக்கு ஆத்ம திருப்தி தந்தவைதான்.

Urvasi-300 Malayalam Film-5 Awards-3

என் ஆரம்ப காலத்திலேயே, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். படத்தின் பெயர் ‘ஸ்ராவணபந்து.’ முக்தா சீனிவாசன்தான் இந்தப் படத்தின் டைரக்டர்.

ராஜ்குமார் அவர்களை, ஒப்பனை அறையில்தான் முதன் முதலாகப் பார்த்தேன். ஒரு முதியவர் போல தெரிந்தார். காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். ‘நல்லா இரு… நீ நல்லா நடிக்கிறே… கன்னடத்தில் நடிக்க வந்திருக்கிறே… கன்னடம் பேசுவியா? ஒரு மொழியில் நடிக்கப் போறப்போ அந்த மொழியை கத்துக்கிட்டு நடிக்கிறது நல்லது’ என்றார்.

நான் ஒரு புதுமுக நடிகை. அவரோ வளர்ந்து விட்ட பெரிய நட்சத்திரம். அவர் என் மீது அப்படி அக்கறையுடன் பேசியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. திரையுலகைச் சேர்ந்த பலருடைய பிள்ளைகள் கோடம்பாக்கம் ஆற்காடு பள்ளியில் படித்தார்கள். நானும் அங்குதான் படித்தேன். ராஜ்குமாரின் பிள்ளைகள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமாரும் அங்கேதான் படித்து வந்தார்கள். அவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள். மேல் வகுப்பில் படித்தார்கள். அந்தப் பள்ளியில்தான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழி மாணவர்களும் படிக்கும் வசதி இருந்தது.

நான் கன்னடப் படத்தில் நடித்தபோது வசனங்களை தமிழில் எழுதி வைத்துக்கொண்டேன்.

படப்பிடிப்புக்கு ராஜ்குமார் வந்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். அரை மணி நேரத்துக்கு முன் முதியவராக இருந்தவர் இளைஞனைப்போல மாறியிருந்தார். ஒப்பனை, அந்த அளவுக்கு அவருக்குப் பொருந்தியிருந்தது.