வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சீரியல் நடிகையும் விளம்பர மாடலுமான ரீகா சிந்து கார் விபத்தில் பலியானார். இந்த விபத்து திட்டமிட்ட கொலை என்று அவர்களின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

சென்னையிலிருந்து பெங்களூரை நோக்கி விளம்பர பட நடிகை ரீகா சிந்து 3 பேருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது கார் சாலையிலிருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரீகா சிந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்தவர்களான அபிஷேக் குமரன் (22), செங்கல்பட்டை சேர்ந்த ஜெயச்சந்திரன் (23), மற்றும் சென்னையை சேர்ந்த ரக்ஷன் (20) ஆகிய 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இது தொடர்பாக ரீகா சிந்துவின் சகோதரர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ரீகா சிந்து கார் விபத்தில் இறந்துவிட்டார் என்று எங்களுக்கு தகவல் வந்தது. ளுடனே நாங்கள் திருப்பத்தூர் மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு அவரது உடலை பார்த்தபோது அது விபத்தில் இறந்ததுபோலவே இல்லை. மேலும் எனது தங்கையுடன் வந்த 3 பேர் மட்டும் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளனர். ரீகா மட்டும் படுகாயம் அடைந்து இறந்திருக்கிறார்.

 

இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவரது சாவில் மர்மம் உள்ளது. மேலும் காரில் ரீகாவுடன் வந்த மற்ற மூவரும் தப்பிச் செல்ல காரணம் என்ன? இது எங்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் மூன்று பேரையும் பிடித்து விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்றார்.

இது பற்றி போலீஸ் உரிய விசாரணை நடத்தி எங்கள் சகோதரியின் சாவில் உள்ள மர்மத்தை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.