சென்னையில் உள்ள ஒரு குடியிருப்பு, சாமியார் நித்தியானந்தாவுக்கு சொந்தமானது என நடிகை ரஞ்சிதா குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (67) இவர் மற்றும் இவரது உறவினர்கள் அங்குள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் தனித்தனி வீடுகளில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக வசிக்கின்றனர்.

இந்த இடம் அரசு புறம்போக்கு கிராம நத்தம் இடம் எனவும், இதன் மதிப்பு 30 கோடி எனவும் கூறப்படுகிறது.

இதனிடையில், ராமநாதன் என்பவர் சில வருடங்களுக்கு முன்னர் இந்த இடம் தனக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், உரிய ஆவணங்களை ராமநாதன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காததால் அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் கிருஷ்ணன் மற்றும் அவர் குடும்பத்தினர் அந்த குடியிருப்பில் தொடர்ந்து வசிக்க அனுமதி வழங்கியது.

இந்நிலையில் பிரபல சாமியார் நித்யானந்தாவின் சீடர்கள் 20க்கும் மேற்ப்பட்டோர் நேற்று நடிகை ரஞ்சிதா தலைமையில் அந்த குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளனர்.

பின்னர் ரஞ்சிதா, இந்த இடம் ராமநாதனின் மகளுக்கு சொந்தமானது. அவர் நித்தியானந்தாவின் சீடர் என்பதால் இந்த இடத்தை அவர் பெயருக்கு எழுதி கொடுத்துள்ளார்.

எனவே நீ உடனே இந்த இடத்தை காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு என கிருஷ்ணனை மிரட்டியுள்ளார்.

பின்னர், சிறிய அளவில் அங்கு குடிசையை அமைத்த நித்தியானந்தாவின் ஆட்கள் அவர் புகைப்படத்தை அங்கு வைத்து பூஜை செய்ய தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து பல்லாவரம் காவல் நிலையத்தில் இருதரப்பும் புகார் கொடுத்துள்ளதையடுத்து பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.